நீதிபதி சரமாரி கேள்வி

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி இறந்த சம்பவம் தொடர்பாக அவரது தந்தை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின்போது, நீதிபதி, “கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியது யார்?, அங்கு படித்த மாணவர்களின் சான்றுகள் எரிக்கப்பட்டுள்ளது. இதில் படிக்கும் 4,500 மாணவர்களின் நிலை என்ன? இந்த நிலை பரிதாபத்துக்குரியது. இதில் மாணவர்களுக்கு என்ன மாதிரியான நியாயம் வழங்கப்படும்? இது போராட்டம் அல்ல, இந்த வன்முறை சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தெரிகிறது. சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதியில்லை. இறந்த மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இப்போது பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மற்ற மாணவர்கள் எதிர்காலம் என்னாவது? நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது போராட்டம் நடத்தியது ஏன்? காவல்துறையினர் தனித்து நின்று போராடி உள்ளனர். யாருடைய கட்டுப்பாட்டிலும் அவர்கள் இல்லை என்பதை பார்க்க முடிகிறது. சட்டத்தை முறையாக அனுமதித்தீர்களா? உளவுத்துறை தரப்பில் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அனுப்பப்பட்டதா, அதனை காவல்துறை எப்படி கையாண்டது? சம்பவம் நடந்த 3 நாட்களாக காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது? சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்கள் குறித்து ஏன் கவனக்குறைவாக இருந்தனர்? தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் பின்னணியில் இருப்பவர்களை காவல்துறையின் சிறப்புப்பிரிவினர் கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறை ஏற்கத்தகக்கதல்ல, மீண்டும் வன்முறை நடந்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். வன்முறையாளர்களை கைது செய்து பள்ளியில் ஏற்பட்ட சேதங்களை வசூலிக்க வேண்டும்” என தெரிவித்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், யாரையும் காப்பாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்திடமும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.