கல்வியை இஸ்லாமியமயமாக்கும் முயற்சி

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2ம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கப் பயன்படுத்தப்பட்ட புத்தகத்தில் உருது மொழி வார்த்தைகள் மற்றும் பெயர்கள் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பதிப்பகத்தால் தயாரிக்கப்பட்ட குல்மோஹர் என்ற புத்தகம்தான் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளது. முஸ்லிம் அல்லாத பெரும்பான்மையான மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில், இந்த புத்தகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில், அம்மி (அம்மா) மற்றும் அபு (தந்தை), பிரியாணி போன்ற பொதுவான குறிப்புகளைத் தவிர ஷானு, சானியா, ஷிரீன், அமீர் மற்றும் நசீம் போன்ற பல முஸ்லிம் பெயர்களும் புத்தகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கு பயிலும் பல மாணவர்கள் தங்கள் பெற்றோரைக் குறிக்க வீட்டில் அபு, அம்மி போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். மேலும், சைவ உணவு உண்பவர்களான பல குழந்தைகள் பிரியாணி சாப்பிடக் கோரத் தொடங்கினர். மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடத்தையில் இத்தகைய மாற்றத்தை கவனித்ததையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, பெற்றோர், உள்ளூர் பஜ்ரங்தள் பிரதிநிதிகளிடம் புத்தகம் குறித்து புகார் அளித்தனர். இதையடுத்து  அவர்கள் கூட்டாக மாநில கல்வித் துறையிடம் புகார் அளித்துள்ளனர். இது குறித்து பேசிய பள்ளி மாணவர்களின் பெற்றோர், ”பள்ளிகளில் குழந்தைகளுக்கு இவற்றை எப்படி சொல்லிக் கொடுக்கின்றனர்?  பிரியாணி எப்படிச் செய்யப்படுகிறது என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், பள்ளி குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை பிரியாணி சாப்பிடச் சொல்லியும் பள்ளிகளுக்கு டிபன் பாக்ஸ்களில் அவற்றை கொண்டு வரச் சொல்லியும் அவர்கள் சொல்கின்றனர் என்றல் இது எந்த மாதிரியான பள்ளி, அவர்கள் நம் குழந்தைகளுக்கு என்ன கற்பிக்கிறார்கள், அப்படிப்பட்ட கல்வியைக் கொடுப்பதன் மூலம் அவர்கள் நம் குழந்தைகளுக்கு என்ன நன்மை செய்யப்போகிறார்கள்? பள்ளிக் கல்வியை இஸ்லாமியமயமாக்கும் முயற்சி இது. இந்த புத்தகம் எங்கள் குழந்தைகளுக்கும் ஹிந்து கலாச்சாரத்திற்கும் இடையே இடைவெளியை உருவாக்கும் முயற்சி” என்று குற்றம்சாட்டினர்.