200 கோடி சாதனை

பாரதம் நேற்று பகல் 12 மணி 15 நிமிடத்தில், 200 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி ஒரு மாபெரும் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனவை தடுக்க நமது மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு படியாக அனைவருக்கும் தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் ஆகியவை செலுத்தப்பட்டு வருகிறது. பாரதத்தில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் வழங்கி வருகிறது. கடந்த அக்டோபர் 21ம் தேதி அன்று 279 நாட்களில் மொத்தம் 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஒரு புதிய மைல்கல்லை பாரதம் அடைந்தது.

தற்போது 200 கோடி தடுப்பூசி என்ற மாபெரும் இலக்கை 547 நாட்களிலேயே பாரதம் அடைந்துள்ளது. 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை அடைய 279 நாட்கள் ஆன நிலையில் 100 கோடியில் இருந்து 200 கோடி என்ற இலக்கை அடைய 268 நாட்கள் மட்டுமே ஆனது. மத்திய அரசின் மாபெரும் முயற்சி, நாட்டு மக்கள் மீதான அக்கறை மட்டுமில்லாது மாநில அரசுகளின் முயற்சிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், நகராட்சிகள் உள்ளிட்டபல்வேறு அரசுத் துறைகளின் முயற்சிகள், நாட்டு மக்களின் விழிப்புணர்வும் ஆர்வமும் தான் இந்த இலக்கை அடைய காரனமாக இருந்தது. இதற்கு பிரதமர் மோடி, மத்திய சுகாதாரதுறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பல்வேறு உலக நாட்டுத் தலைவர்கள் இதற்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

சீன தடுப்பூசி சாதனை? சீனாவைப் பொறுத்தவரை அது 200 கோடி தடுப்பூசிகளை எப்போதோ கடந்துவிட்டது என கூறுகிறது. எனினும், தனது நாட்டில் அனைத்தையுமே வெளி உலகுக்குத் தெரியாமல் ரகசியமாக செயல்படுத்தும் ஜனநாயகமற்ற சீனா, வடகொரியா போன்ற நாடுகளின் கூற்றுகளை எந்த உலக நாடும் இதுவரை நம்பியதில்லை என்பது வரலாறு. மேலும், சீனாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மீண்டும் மீண்டும் கொரோனா தாக்குவது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இது ஏற்கனவே அந்த நாட்டின் தடுப்பூசிகள் மீதிருந்த சந்தேகத்தை உறுதி செய்வதாகவே உள்ளது. எனவே, சீன தடுப்பூசி சாதனைகளை உலக நாடுகளுக்கு ஒரு பொருட்டே அல்ல என்பதுதான் உண்மை.