கான்பூர் வன்முறை திட்டமிடப்பட்டது

பா.ஜ.கவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவுக்கு எதிராக உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் முஸ்லிம்கள் திட்டமிட்ட ரீதியில் ஜூன் 3ம் தேதி வன்முறையில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது கற்கள், வெடிகுண்டுகள் வீசப்பட்டன. வாகனங்கள், கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இவ்வழக்கில் 40க்கும் மேற்பட்ட கலவரக்காரர்களை போலீசார் கைது செய்தனர். முதன்மை குற்றவாளி ஹயாத் ஜாபர் ஹஷ்மி மற்றும் அவரது கூட்டாளிகள் வைத்திருந்த சட்டவிரோத சொத்துக்களை இடித்துள்ளனர். வன்முறை தூண்டுவதற்காக வளைகுடா நாடுகளில் இருந்து அவர்கள் பணத்தை பெற்றுள்ள விவரமும் ஹஷ்மியின் அலைபேசியில் தகவல்தொடர்புகளில் இருந்து கைப்பற்றியுள்ளனர் வங்கிக் கணக்குகளையும் விசாரித்து வருகின்றனர். இந்த வன்முறையை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) நீதிமன்ற விசாரணையின் போது திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டது. அதில், வன்முறையின் போது கற்களை வீசுவதற்கும் குண்டுகளை வீசுவதற்கும் ஒரு நிலையான கட்டணம் வன்முறையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கான்பூரில் வன்முறை நிகழ்த்த அவர்கள் விரிவாக திட்டமிட்டு அதனை செயல்படுத்தினர். வன்முறையைத் தூண்டுவதில் ஈடுபட்ட ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு பொறுப்புகள் அளிக்கப்பட்டன. கலகக்காரர்களுக்கு பணம் செலுத்துவதற்காக ஒரு பிரத்தியேக முறையை கையாண்டனர். விசாரணையின் போது, ​​வன்முறைக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்கப்படும், அவர்களது குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர். கலவரக்காரர்களுக்கு முன்பணமாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. கல் வீசுபவர்களுக்கு 1,000 ரூபாயும், கை வண்டிகளில் கற்களை எடுத்து வருபவர்களுக்கும் வெடிகுண்டு வீசுபவர்களுக்கு 5,000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. கற்களை வீசுவதற்கும் வன்முறையில் பங்குகொள்வதற்கும் சிறார்களை “வாடகைக்கு” அமர்த்தினர். சிறார்கள் கைது செய்யப்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாது என்பதே இதன் யோசனை. சிறார்களை கலவரத்தில் பங்கு கொள்ள வைப்பதற்காக வாழ்நாள் முழுவதும் நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. மேலும், அதில் ஈடுபட்டவர்களின் பெயர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள், பணம் போன்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.