நமது நாட்டில் குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் ஒத்துழைக்க மறுத்து பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்திவருவதாக பல்வேறு தரப்பினர் விமர்சனத்தை முன்வைக்கின்றனர். புள்ளிவிவரங்களும் அதை உறுதி செய்கின்றன். இந்நிலையில், உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு யோகி ஆதித்யநாத் ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளிக்கையில், “மக்கள் தொகை கட்டுபாட்டுத்திட்டம் வெற்றிகரமாக செயல்படவேண்டும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அதேநேரத்தில் மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு நிலை உருவாக நாம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது. வெவ்வேறு மதக்குழுக்களின் வளர்ச்சி விகிதங்களில் உள்ள வேறுபாடுகள் நாட்டில் குழப்பத்தையும் அராஜகத்தையும் ஏற்படுத்தும். பூர்வீகவாசிகள் பற்றிய விழிப்புணர்வோடு மக்கள்தொகை கட்டுப்பாட்டில் நாம் செயல்படும்போது தனிப்பட்ட ஒரு வகுப்பினரின் வளர்ச்சி சதவிகிதம் அதிகரிப்பதை அனுமதிக்க கூடாது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள்தொகையை சமப்படுத்தும் முயற்சியில் அனைத்து மதங்களும் துறைகளும் சமமாக சேர்க்கப்படவேண்டும். நம்மிடையே திறமையான மனிதவளம் இருந்தால் அது சமுதாயத்திற்கு ஒரு சாதனையாக கருதப்படும். ஆனால் நோய்கள் வளங்களின் பற்றாக்குறையில் சீர்குலைவு இருக்கும் இடங்களில் மக்கள்தொகை அதிகரிப்பு ஒரு சவாலாக மாறும். மனிதனின் ஜனத்தொகை 100 கோடியை எட்ட லட்சக்கணக்கான ஆண்டுகள் தேவைப்பட்டது. 100லிருந்து 500 கோடியாக மாற 185 ஆண்டுகளே தேவைப்பட்டுள்ளது. வளர்ச்சி விகிதம் இப்படியே இருந்தால் இந்த 2022 இறுதிக்குள் உலக மக்கள் தொகை 800 கோடியாக இருக்கும்” என தெரிவித்தார்.