தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொய்யான வழக்குகள் போடுவதை வாடிக்கையாக கொண்ட தி.மு.க. விளம்பர அரசுக்கு, மீண்டும் ஒரு முறை உயர் நீதிமன்றம் குட்டு வைத்திருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, இன்று ஓ.பி.சி அணியின் மாநில பொது செயலரான சூர்யாவுக்கு ஜாமின் வழங்கியுள்ளது. இதேபோல, புனையப்பட்ட ஒரு பொய்யான வழக்கில் கைதான, மாநில செயற்குழு உறுப்பினரான சவுதாமணியை வெளியே கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், மாநில வழக்கறிஞர் அணி எடுத்து வருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது. மற்றொரு அறிக்கையில், ‘ஜனவரி மாதத்தில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, தி.மு.க அலுவலகத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். நேற்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் எம்.பி சின்ராஜ், மரியாதையின்மையைச் சுட்டிக்காட்டி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். சுயமரியாதை பற்றி மற்றவர்களுக்குப் பாடம் எடுக்கும் இந்த தி.மு.க அரசு, தனது கூட்டணியில் உள்ள கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை மட்டும் மறந்து விடுவார்கள் போல’ என தெரிவித்துள்ளார்.