சட்டவிரோத பி.எஸ்.என்.எல் எக்ஸ்சேஞ்ச்

கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த சஜீர், ஆண்டிபட்டியிலும், முகமது ஆசிப் ஆகியோர் தேனியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். அங்கு பி.எஸ்.என்.எல் அலைக்கற்றையை சட்டவிரோதமாக சீன தொலைதொடர்பு இணைப்பு சாதனம் மூலமாக மூன்று மாதங்களாக பல்வேறு நாடுகளுக்குப் பேசியுள்ளனர். சுமார் 32 சிம் கார்டுகள் வரை பொருத்தக்கூடிய இந்த சாதனத்தில் நாளொன்றுக்கு 300க்கும் மேற்பட்ட அழைப்புகள் மேற்கொள்ளலாம். அப்படி அந்த சாதனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அழைப்புகள் சாதாரண அழைப்பாகவே காட்டப்படும்.‌ மேலும் யாருக்கு, எங்கிருந்து தொடர்பு கொண்டனர் என்ற விவரங்கள் ஏதும் இந்த சாதனங்களில் கண்டறிய முடியாது.‌ இவர்கள் இப்படி மொத்தம் 31 சாதனங்களை பயன்படுத்தியுள்ளனர். அதில் 14 செயல்பாட்டில் இருந்துள்ளன. இவர்களிடமிருந்து மொத்தம் 992 சிம் கார்டுகளை காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறு கடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு அழைப்புகளால் பி‌.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளிலிருந்து அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளுக்கு மாற்றிக் கொடுப்பது, இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அழைப்பது போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளதால், இவர்கள்தேசவிரோத, பயங்கரவாத சதிச்செயல் ஈடுபட முயன்றனரா அல்லது ஆன்லைன் மோசடிக்கான செயலா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்ட பி.எஸ்.என்.எல் அலுவலகம் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் சஜீர், முகமது ஆசிப் இருவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.