முடிவை பற்றிய கவலை வேண்டாம்

ஒரு நாட்டின் அரசர் தன்னுடைய மகனை அடுத்த அரசனாக அறிவிப்பதற்கு முன் வில்வித்தை சொல்லித்தரும் ஒரு குருவிடம் அனுப்பி வைத்தார்.

அனுப்புவதற்கு முன் அவர் தன் மகனிடம், ‘உன்னுடைய குரு உன்னை தேர்ச்சி அடைந்ததாக அறிவித்தால் மட்டுமே நீ இந்த நாட்டின் அரசனாக முடியும்’ என சொல்லி வழியனுப்பினார்.

பயிற்சி ஆரம்பம் ஆனது. நாட்கள் கடந்தது இளைஞனும் நன்றாக கற்றுக்கொண்டுவிட்டான். மிக சரியாக அம்பு எய்தவும் செய்தான். ஆனால் குரு அவனை தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கவில்லை. வருடங்கள் சிலவாகியும் குரு தவறு என்றே சொல்லிக்கொண்டிருந்தார். அவனுக்குப் புரியவில்லை குருவிடம் கேட்டான் ‘நான் சரியாகத்தானே எய்கிறேன் அம்பு சரியான இடத்தில்தானே சேர்கிறது?’

குரு சொன்னார் ‘எல்லாம் சரிதான் அந்த நிகழ்வில் அம்பு ஏய்துவதற்கு முன்பே அது சரியான இடத்தில்தான் சேரவேண்டும் என்று நீ முடிவு செய்கிறாய். அந்த மொத்த நிகழ்வும் உன்னால் நிகழ்வதாக நினைக்கிறாய். அம்பு எய்துவதில் உன்னுடைய அகந்தை உள்ளது. அது இலக்கை அடைந்தாலும் அடையவில்லை என்றாலும் உன்னால்தான் உன்னால்தான் என்று நினைக்கிறாய். இதுதான் பிரச்சனை. நன்றாக புரிந்துகொள் அம்பு சரியான இடத்தை அடைய அம்பின் எடை, வில், காற்று அடிக்கும் திசை, தூரம், எதுவுமே உன்னுடைய கட்டுபாட்டில் இல்லை. அவைகளின் ஒத்துழைப்பு இல்லாமல் நீ இலக்கை அடைய முடியாது. ஆனால் உன்னால்தான் ஆனது என்று நீ முடிவு செய்கிறாய். இவைகளை முன்பே தீர்மானிப்பதும், உன்னால்தான் இலக்கை அடைந்தது என்று நீ நினைப்பதிலும்தான் தவறு உள்ளது. இளைஞன் கேட்டான்….. ‘நான் என்ன செய்ய வேண்டும்?’

அதற்கு குரு, ‘அம்பு தானாக எய்துகொள்ளப்படவேண்டும். நீ அங்கு இருக்கக்கூடாது. நீ எய்யவில்லை. அம்பு தானாக எய்துகொள்ள வேண்டும். அம்புக்கு உனது சக்தி மட்டும்தான் தேவைப்படுகிறது. அதை கொடுத்தால் மட்டும் போதும், முடிவை பற்றி கவலைப்படக்கூடாது. முக்கியமாக அதில் விளையாட்டுத்தனம் மட்டுமே இருக்கவேண்டும்’ என்றார்.

ஆனால் அவனுக்கு அது புரியவில்லை. மேலும் சில மாதங்கள் கடந்தது அம்பு எய்வதில் அவன் முன்பை போலவே தீவிரமாகவே இருந்தான். குரு நிராகரித்துக்கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் சோர்வுற்ற அவன், பிறகு வருவதாக சொல்ல குருவும் அனுமதித்தார். மறு நாள் காலை பயணம் தொடங்கும் முன் குரு மற்றவர்களுக்கு அம்பு விட சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதனை அந்த இளைஞன் முதல் முறையாக எந்த தீர்மானமும் இல்லாமல் வெறுமனே கவனித்தான். குரு மிகவும் விளையாட்டுத்தனமாக அம்பு எய்துகொண்டிருந்தார். அவரிடம் இறுக்கம், பதட்டம் இல்லை. மாறாக விளையாட்டும் உற்சாகமுமிருப்பதை கவனித்தான். அவர் மூலமாக அங்கு ஒரு ஒரு எல்லையற்ற சக்தி விளையாடிக் கொண்டிருந்தது. எல்லாம் மிக சரியாக இலக்கை அடைந்தன.

இளைஞன் அவனை அறியாமல் குருவிடம் வந்தான். வில் அம்பை கையில் வாங்கினான். எந்த தேர்வும்,தீர்மானமும் இல்லாமல் விளையாட்டாக அம்பை எய்தான். அம்பு இலக்கை அடைந்தது. இந்த முறை தன்னுடைய கைகளுக்கு ஏதோ ஒரு புதுவித சக்தி வந்ததை அவன் உணர்ந்தான். குரு அவன் தேர்ச்சியடைந்ததாக அறிவித்தார்.

முன்பே தீர்மானிப்பதும்,திட்டமிடுதலும் நம்மை சோர்வடையச் செய்கிறது. வெற்றியும்,தோல்வியும் தானே நிகழ்வது. விளையாட்டுத்தனமான சஞ்சலமற்ற மனதுடன் நாம் எதையும் ஏற்றுக்கொள்பவராக அங்கு இருந்தால் மட்டும் போதும்.