மரக்கன்றுகள் நட்டு சாதனை

பாரதம் முழுவதும் சுற்றுக்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களிடம் மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரம் ‘வன மகோத்சவம்’ கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ‘காவேரி கூக்குரல் இயக்கம்’ சார்பில் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தமிழகம் முழுவதும் ஜூலை 1 முதல் 7ம் தேதி வரை நடைபெற்றது. கோவை, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தென்காசி, விழுப்புரம், செங்கல்பட்டு என 37 மாவட்டங்களில் சுமார் 700 ஏக்கர் விவசாய நிலங்களில் 2.10 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டது. சுற்றுக்சூழல் மேம்பாட்டுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மஞ்சள் கடம்பு, ரோஸ்வுட் போன்ற மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்தனர். மேலும், காவேரி கூக்குரல் இயக்க களப்பணியாளர்கள் விவசாயிகளின் நிலங்களுக்கு நேரடியாக சென்று மண்ணின் தன்மை, நீரின் தரம் போன்றவற்றை ஆய்வு செய்து மண்ணுக்கேற்ற மரங்களை பரிந்துரைத்தனர். மரம் நடும் வழிமுறைகளையும் எடுத்துரைத்தனர். காவேரி கூக்குரல் இயக்கமானது காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் சத்குரு ஜக்கி வாசுதேவால் 2019ல் தொடங்கப்பட்டது. இவ்வியக்கத்தின் மூலம் தமிழகம், கர்நாடகாவில் இதுவரை 2.10 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டுள்ளனர். வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன், மரம் தங்கசாமி ஆகியோரின் பிறப்பு மற்றும் நினைவு நாட்களிலும் இதேபோல், லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.