இயக்குனர் மீது வழக்கு பதிவு

திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலை சமூக ஊடகங்களில் ‘காளி’ என்ற பெயரிடப்பட்ட ஆட்சேபனைக்குரிய போஸ்டரைப் பகிர்ந்ததை அடுத்து அது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நாடெங்கிலும் இருந்து மட்டுமல்ல, கனடாவில் உள்ள ஹிந்துக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ‘லீனா மணிமேகலையை கைது செய்யுங்கள்’ என்ற ஹேஷ்டேகும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவர் மீது தமிழகத்திலும் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள பாரதத் தூதரகம் அந்த போஸ்டரையும் படத்தையும் தடை செய்ய கனடா அரசை கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில், லீனா மணிமேகலை மீது கிரிமினல் சதி, வழிபாட்டு இடத்தில் குற்றம் செய்தல், மத உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்துதல், அமைதியை சீர்குலைக்கும் நோக்கம் உள்ளிட்டகுற்றச்சாட்டுகளின் கீழ் டெல்லி காவல்துறையின் உளவுத்துறை இணைவு மற்றும் வியூக நடவடிக்கைகள் (IFSO) பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்றதொரு வழக்கு உத்தரப் பிரதேசத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.