ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டம் துக்சான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக காஷ்மீர் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவல்துறையினரும் எல்லை பாதுகாப்பு படையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லக்ஷர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பைசல் அகமது தார் மற்றும் தாலிப் உசேன் என்ற 2 பயங்கரவாதிகளை துக்சன் கிராம பொதுமக்கள் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து பேசிய துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த 2 பயங்கரவாதிகளை கைது செய்ய உதவிகாரமாக இருந்த துணிச்சலான கிராம மக்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவித்தார். ஏ.டி.ஜிபி. முகேஷ் சிங் கூறுகையில், சமீப காலமாக செனாப் பள்ளத்தாக்கு மற்றும் ரஜோரி பூஞ்ச் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளை புத்துயிர் பெற எல்.ஈ.டி என்னும் தீவிரவாத அமைப்பு முயற்சித்து வருகிறது. அவர்களின் பல குண்டுவெடிப்பு முயற்சிகள் முறியடிக்கப்பட்டது. ஆனால் முக்கிய பயங்கரவாதி தலிப் ஹுசைன் தலைமறைவாக இருந்தான். உள்ளூர் கிராம மக்கள் அவர்களை பிடிக்க எங்களுக்கு உதவினார்கள். அவர்களிடமிருந்து 2 ஏ.கே ரக துப்பாக்கிகள், 7 கைக்குண்டுகள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. கிராம மக்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கூறினார்.