சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பலரும் தற்போது மருத்துவம், கல்வி, சட்டம் உள்பட பல்வேறு தலைப்புகளில் வீடியோக்களை பதிவு செய்துவருகின்றனர். இந்த தலைப்புகளில் அவர்களுக்கு உண்மையாகவே தகுதி, திறமை, அனுபவம் உள்ளதா என்பது கேள்விக்குறி. அவர்கள் பின்னணி குறித்துத் தெரியாமல் அவர்களின் அறிவுரையை அப்படியே பின்பற்றுபவர்களும் அதிகமாக இருக்கின்றனர். இதனால் பல்வேறு பிரச்சனைகளுக்கு அவர்கள் ஆளாகின்றனர். இது மிகவும் ஆபத்தானது. இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சீன அரசு தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, சீனா தற்போது புதிய சட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி சமூக வலைதளங்களில் நிதி, மருத்துவம், சட்டம், கல்வி போன்ற தலைப்புகளில் வீடியோ பதிவு செய்பவர்கள் அதற்கான உரிமை பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் இப்படி ஆபத்தான இலவச அறிவுரை கூறும் வீடியோக்கள் அதிகரித்து வருகின்றன. மில்லியன் கணக்கான லைக்ஸ், அதிக பார்வையாளர்கள் மற்றும் வீடியோக்களுக்கு அதிக பார்வையாளர்கள் கிடைத்தால் வருமானம் அதிகம் கிடைக்கும் என்ற ஒரே நோக்கத்துடன் பதிவு செய்யப்படும் இந்த வீடியோக்கள் தரமானவையா? தேர்ச்சி பெற்ற நிபுணர்களிடம் இருந்து வருகிறதா என்பதை கண்காணிக்க பல நாடுகள் தற்போது சிந்திக்கத் துவங்கியுள்ளன. விரைவில் பாரதம் உட்பட பல நாடுகளும் இதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.