திருணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான நிர்மல் மஜி, சமீபத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவியும் ஆன்மிக துணையுமான சாரதா தேவி, தான் காளிகாட் பகுதியில் மறுபிறவி எடுத்ததாகவும் சமூகப் பணிக்கு தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பதாகவும் அரசியல்வாதியாக மக்களுக்குச் சேவை செய்ய உள்ளதாகவும் ராமகிருஷ்ணா மிஷன் துறவிகளிடம் தெரிவித்ததாகக் கூறினார். மேலும், திருணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவியும் மேற்கு வங்கத்தின் முதல்வருமான மமதா பானர்ஜி தான் சாரதா தேவியின் மறுபிறவி. அவர் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல், சகோதரி நிவேதிதா மற்றும் தேவி துர்கா தேவியின் அவதாரம் என்றும் கூறினார். எம்.எல்.ஏவின் இந்த இந்த அபத்தமான கூற்று கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராமகிருஷ்ணா மிஷன், முன்னெப்போதும் இல்லாத வகையில், எம்.எல்.ஏ நிர்மல் மஜியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
ராமகிருஷ்ணா மிஷனின் பொதுச் செயலாளர் சுவாமி சுவீராநந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிர்மல் மஜியின் கருத்துக்களால் நாங்கள் அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளோம். சாரதா தேவியின் புகழ் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தாய் சாரதா தேவி கம்பீரமான பெண் மட்டுமல்ல, சீதா, ராதாராணி, விஷ்ணுப்ரியா தேவி போன்ற மிகப்பெரிய ஆன்மீக ஆளுமையும் கூட. அவர், இனம், மதம், ஜாதி வேறுபாடின்றி அனைவரிடமும் ஒரே மாதிரியான பார்வையை கொண்டிருந்தார். ராமகிருஷ்ண மடம் மற்றும் அதன் துறவிகளும் பிரம்மச்சாரிகளும், இந்த கருத்தால் மிகுந்த வருத்தமும் கோபமும் அடைந்துள்ளனர். எண்ணற்ற பக்தர்கள் தங்களின் கோபத்தையும் வருத்தத்தையும் எங்களுக்கு மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி வாயிலாக தெரிவித்து வருகின்றனர். உண்மையில் எங்கள் துயரத்தை வெளிப்படுத்த எங்களுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. எங்கள் அம்மாவை நீங்கள் அவமரியாதை செய்தது வருந்தத்தக்கது. இது போன்ற ஒரு வரலாறு காணாத சம்பவம் மீண்டும் ஒருமுறை யாராலும் நடத்தப்பட வேண்டாம்” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து திருணமூல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், ‘நிர்மல் மஜியின் அறிக்கை முற்றிலும் விரும்பத்தகாதது, அறிவுபூர்வமற்றது, நடைமுறைக்கு மாறானது. இது கட்டுக்கடங்காத புகழ்ச்சிக்கான முயற்சி. தாய் சாரதா உலகம் முழுவதும் உள்ள அனைவராலும் அன்னையாகப் போற்றப்படுகிறார். அவரது பிரபலமும் ஏற்றுக்கொள்ளும் தன்மையும் தலைமுறைகளைத் தாண்டிவிட்டன. மமதா பானர்ஜியை எங்கள் தலைவராக நேசிக்கும், மதிக்கும் நம் அனைவருக்கும், அவரது போராட்டங்கள், அர்ப்பணிப்பு மற்றும் மக்கள் மீதான அன்பு எங்களுக்குத் தெரியும். அவரது அரசியல் அந்தஸ்து வங்காளத்தைத் தாண்டி பாரதம் முழுவதும் பரவியுள்ளது. எனினும் இத்தகைய விரும்பத்தகாத புகழ்ச்சி அவரை ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளுகிறது. மமதா பானர்ஜி தனது சொந்த ஒளியினால் ஞானம் பெற்றவர்’ என்று தெளிவற்ற குழப்பமான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை மேலும் ஒரு புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
தமிழக திராவிட அரசியலைப் போன்றே மேற்கு வங்கத்திலும் மமதா பானர்ஜியை காக்காய் பிடிக்க அக்கட்சியின் மற்றத் தலைவர்கள் அடிக்கடி அவரை தகுதிக்கு மீறி புகழ்வது, பாராட்டுவது, காலில் விழுவது என செயல்படுகின்றனர். மமதா பானர்ஜி மற்றும் அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் திரிணாமுல் அணியினரால் கிட்டத்தட்ட தெய்வமாக வணங்கப்படுகிறார்கள்.