பீகார் சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடரின் நிறைவு நாளன்று சபை நடவடிக்கைகள் முடிந்ததும், பீகார் சட்டப்பேரவையில் நமது தேசியப் பாடலான வந்தே மாதரம் இசைக்கப்பட்டவுடன் முதல்வர் நிதிஷ் குமார், எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உட்பட அனைத்து எம்.எல்.ஏக்களும் எழுந்து நின்றனர். ஆனால், தாகுர்கஞ்ச் தொகுதியின் ஆர்.ஜே.டி எம்.எல்.ஏ சௌத் ஆலம் எழுந்து நிற்க மறுத்துவிட்டார். சட்டசபையில் இருந்து வெளியே வந்த சௌத் ஆலமிடம் அவரது செயல் குறித்து கேட்டபோது, நாடு இன்னும் ஹிந்து நாடாக மாறாததால் தான் எழுந்து நிற்கவில்லை என்று கூறி தன்னை தற்காத்துக் கொண்டார். மேலும், “வந்தே மாதரம்” நமது தேசிய கீதம் அல்ல. நமது தேசிய கீதம் “ஜன கண மன,” அதனால்தான் நான் நிற்கவில்லை” என்றும் அவர் கூறினார். பீகாரைச் சேர்ந்த பா.ஜ.க எம்எல்ஏ சஞ்சய் குமார் சிங், “இது போன்ற நடத்தையை பொறுத்துக் கொள்ள முடியாது செய்தியாளர்களிடம் பேசிய சிங், வந்தே மாதரத்திற்கு மரியாதை தந்து எழுந்து நிற்காமல் அவர் நமது விடுதலை போராட வீரர்களை அவமதித்துள்ளார். அப்படிப்பட்டவர்கள் சட்டசபையில் இருக்கத் தேவையில்லை” என்று ஆலமை கடுமையாக சாடினார்.