கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் வீட்டில் இருந்தே பாடம் படித்த மாணவர்களை ‘கொரோனா பேட்ச் மாணவர்கள்’ என்று கிண்டல் செய்வதும்; அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது, அவர்களை நிறுவனங்கள் பணிக்கு எடுப்பதில்லை என்றும் பரவலாக ஒரு மாயக்கருத்து நிலவி வருகிறது. ஆனால், கொரோனா தொற்றுக் காலத்தில் கேம்பஸ் இண்டர்வியூ நடக்காததால் சந்தையில் உண்மையாகவே திறமையுள்ள பட்டதாரிகளுக்கு அதிகப்படியான தேவையுள்ளது என்பதுதான் உண்மை. மேலும், பாரதத்தில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு மட்டும் தான் கோடி ரூபாய் அளவில் சம்பளம் கிடைக்கும் என்ற பிம்பத்தை சமீப காலமாகப் பல பட்டதாரிகள் உடைத்து வருகின்றனர். அவ்வகையில், இதற்கு ஒரு உதாரணமாக, கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பயின்ற பிசாக் மொண்டல் என்ற மாணவர், ஓரே நேரத்தில் கூகுள், அமேசான், பேஸ்புக் என 3 பெரிய நிறுவனங்களில் பணியில் சேர தேர்வாகியுள்ளார். இதுபோல ஓரே நேரத்தில் உலகின் 3 மிகப்பெரிய, புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒருவர் தேர்வாவது அவ்வளவு எளிதல்ல. கொரோனா தொற்றுப் பாதிப்பு இருந்த 2 வருடத்தில் பிசாக் மொண்டல் பல நிறுவனங்களில் பகுதி நேரமாகவும், முழுநேரமாகவும் பணியாற்றி பெரு நிறுவனங்களில் சேரும் அளவிற்குத் திறமையை வளர்த்துக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். தனது எதிர்காலத் திட்டத்தைக் கருத்தில் கொண்டு வருடத்திற்கு 1.8 கோடி ரூபாய் சம்பளமும், லண்டனில் வேலைவாய்ப்பையும் அளிக்கும் பேஸ்புக் நிறுவனத்தில் பணியில் சேர முடிவெடுத்துள்ளார். பிசாக் மொண்டலின் தாய் அங்கன்வாடியில் பணியாற்றும் ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தின் பல பிரிவுகளைச் சேர்ந்த 9 மாணவர்கள் வெளிநாட்டு வேலையுடன் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான சம்பளத்தில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.