கொரோனா பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த காஷ்மீரில் அமர்நாத் பனிலிங்க யாத்திரை 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தொடங்குகிறது. இதுகுறித்து அமர்நாத் கோயில் வாரியத் தலைமை செயல் அதிகாரி நிதிஷ்வர் குமார் கூறுகையில், “இந்த ஆண்டு டெல்லியில் இருந்து பக்தர்கள் ஒரே நாளில் அமர்நாத் யாத்திரையை முடிக்கலாம். டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஸ்ரீநகருக்கும், ஸ்ரீநகரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பஞ்சதாரணி வரையும் சென்று அங்கிருந்து குகைக் கோயிலுக்கு செல்லலாம். வழிபாட்டுக்குப் பிறகு ஹெலிகாப்டரில் ஸ்ரீநகர் திரும்பினால், அங்கு நள்ளிரவு வரை டெல்லிக்கு விமான சேவை உள்ளது. மேலும், யாத்ரீகர்கள் ஸ்ரீநகரில் இருந்து நீல்கிராத் சென்றும் யாத்திரையை முடிக்கலாம். இதற்கு முன் 2 இடங்களுக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்கப்பட்டது. தற்போது 4 இடங்களுக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்கப்படுகிறது” என தெரிவித்தார். ஸ்ரீநகர் – நீல்கிராத் மற்றும் ஸ்ரீநகர் – பஹல்காம் இடையே ஒரு வழி பயணக் கட்டணம் முறையே ரூ. 11,700 மற்றும் ரூ. 10,800 ஆகும்.