கிழக்கு லடாக்கில் பாரதம் சீனா இடையே இன்னும் சில எல்லைப் பிரச்சனைகள் முடியாமல் தொடரும் சூழலில், சீனா அங்கு பல நவீன உள்கட்டமைப்புகளை நிறுவி மேம்படுத்தி வருவதுடன் நவீன ஆயுதங்களையும் நிலை நிறுத்தி வருவதாக உளவுத்துரை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2020ம் ஆண்டில் எல்லையையொட்டி 20,000 துருப்புக்களுக்கான தங்குமிட வசதி மட்டுமே இருந்த சூழலில் அது இப்போது 1.2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு தேவையான மின்சாரம், வெப்ப ஆற்றலை பெறுவதற்காக எல்லைப்பகுதி முழுவதும் அவர்கள் சூரிய ஆற்றல் மற்றும் சிறிய நீர்மின் நிலையங்களை அமைத்துள்ளனர். இது அவர்களின் குளிர்கால வாழ்வாதாரத் திறனை பன்மடங்கு அதிகரித்துள்ளது. சீன ராணுவத்தின் 4வது பிரிவு பழைய ZTZ 88 டாங்கிகளுக்குப் பதிலாக ZTQ 15 என்ற நவீன லகுரக டாங்கிகளையும் 96 ஏ ரக டாங்கிகளையும் நிலை நிறுத்தியுள்ளது. கரடுமுரடான நிலப்பரப்பில் சிறந்த நடமாட்டத்திற்காக இழுத்துச் செல்லத்தக்க ஹோவிட்சர்களுக்கு பதிலாக நேரடியாக டிரக்கில் பொருத்தப்பட்ட ஹோவிட்சர்கள் பயன்படுத்தப்படுகிறது. பழைய வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பதிலாக புதிய மற்றும் அதிக திறன் கொண்ட HQ 17 மற்றும் HQ 9 வான் ஏவுகணை அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. திபெத்திய பீடபூமியில் உள்ள தனது விமான தளத்தையும் மேம்படுத்தியுள்ளதுடன் அதன் ஓடுபாதைகளின் நீளத்தையும் அதிகரித்துள்ளது சீனா என தெரிவிக்கப்பட்டு உள்ளது.