அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் ஆட் சேர்ப்புக்கான தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் ஆட்சேர்ப்புக்கான பதிவுகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள அக்னி பத் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும், இளைஞர்கள், அக்னி வீரர்களாக முப்படைகளில் பணியாற்ற, மத்திய அரசு ‘அக்னிபத்’ என்ற திட்டத்தை 14ம் தேதி அறிவித்தது. 17 வயது முதல் 21 வயதுடையவர்கள் முப்படையில் 4 ஆண்டுகால ஒப்பந்தத்தில் மாத ஊதியம் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாத ஊதியம் 30 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என்றும் அதில் இருந்து 25 சதவீதம் பேர் ராணுவத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள், மீதமுள்ளோருக்கு, 10 முதல் 12 லட்சம் ரூபாய் வரை சேவைத் தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதைத்தவிர, பணிகாலம் முடித்து வெளியே வருவோருக்கு அரசுத்துறைகள், துணை ராணுவப் படைகள் மட்டுமல்லாது பல தனியார் நிறுவனங்களும் முன்னுரிமை அடிப்படையில் வேலைக்கு சேர்க்க முன்வந்துள்ளன. இந்நிலையில்,‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ், விமானப் படையில் அக்னி வீரர்களாக சேர கடந்த சில நாட்களில், சுமார் ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.