கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி; குமாரபாளையத்தில் தனக்கு சொந்தமான நிலத்தை, போலி ஆவணங்கள் வாயிலாக, ரியல் எஸ்டேட் தரகர்கள், சார் பதிவாளர் மற்றும் மாவட்ட பதிவாளர் ஆகியோரின் துணையுடன்அபகரித்துள்ளனர் என்று புகார் அளித்தார்.லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் மாநகர காவல்துறை ஆணையருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், வழக்குப் பதிவு செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.மனுவை விசாரித்த நீதிபதி, ‘முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் குறைப்புக்காக, நிலத்தின் மதிப்பை குறைவாக காட்டியிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையால், அரசுக்கு 4 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த ஆண்டு மே மாதம், பத்திரப்பதிவு ஐ.ஜி.,க்கு, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இருந்து பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. ஓராண்டாக, இந்த விஷயத்தில் பத்திரப்பதிவு ஐ.ஜி., துாங்கி கொண்டிருப்பதாக தெரிகிறது.அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழான புகார்களில் இதுபோன்று செயல்படுவது கண்டனத்துக்குரியது’ என்று கூறி விசாரணையை, ஜூலை 7க்குதள்ளி வைத்தார்.