பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “சென்னை நந்தம்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் ஓர் அங்கமாக குறிப்பிடப்பட்டுள்ள 6 ஏக்கர் நிலத்தை குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைப் பகுதியாக அறிவிக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் முடிவு செய்துள்ளது, அதற்கான கூட்டம் இந்த வாரத்தில் நடைபெற உள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை மாநகரில் வெள்ளத்தை ஏற்படுத்தும் சக்தியாக அடையாறு மாறியுள்ள நிலையில், இதில் அதீத ஆர்வம் காட்டப்படுவது கவலையளிக்கிறது. ஏற்கனவே, இது குறித்த தனியார் நிறுவனத்தின் கோரிக்கைகள் கடந்த 17 ஆண்டுகளாக சி.எம்.டி.ஏ.வால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட நிலம் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று வருவாய்த்துறையும், அந்த நிலத்தின் வகைப்பாட்டை மாற்றி அமைக்க ஆட்சேபனையில்லை என்று பொதுப் பணித்துறையும் கடந்த 2020, 2021ல் சான்றிதழ் வழங்கியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஆவணங்களின் அடிப்படையில் பார்க்கும் போது சம்பந்தப்பட்ட நிலம் ஆற்றுப்பகுதியாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய நிலம் அடையாற்றின் நீரோட்டத்தை தடுக்கும் வகையில் இருப்பதை சி.எம்.டி.ஏ வரைபடம் தெரிவிக்கிறது. சென்னையில் கடந்த 2015ல் பெய்த மழையில் போது அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சென்னையின் பல்வேறு பகுதிகள் மூழ்கியதும் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் மறக்க முடியாது. இந்த சூழலில் அடையாற்றின் நீரோட்டத்திற்கு தடையாக இருப்பதாக கூறப்படும் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளையோ, தொழிற்சாலைகளையோ கட்ட அனுமதித்தால் எதிர்காலத்தில் சென்னைக்கு பெரிய அளவில் வெள்ள பாதிப்புகள் ஏற்படக்கூடும். தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக இருப்பவை வருவாய்த்துறை சான்றுகள் தான். ஆனால், அவையே 2016ல் திருத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அவை குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார்.