ஆகஸ்ட்டில் 5ஜி

தொலைத்தொடர்புத் துறையில், அடுத்த தலைமுறை தொழில்நுட்பமான ‘5 ஜி’  விரைவில் பாரதத்தில் நடைமுறைக்கு வரவுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஜூன் 15 அன்று 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு 5ஜி சேவைகளை வழங்குவதற்காக ஏலம் அடிப்படையில் அலைக்கற்றைகள் ஒதுக்கப்படும். ஜூலை 26ம் தேதி தொடங்கும் ஏலத்தின் போது 72 ஜிகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைகள் 20 ஆண்டுகள் செல்லுபடியாகும் கால திட்டத்துடன் ஏலத்தில் முன்வைக்கப்படும். இதில் குறைந்த அலைவரிசை பிரிவில் 600 முதல் 2,300 மெகா ஹெர்ட்ஸ் அலைகற்றைகளும் மத்திய பிரிவில், 3,300 மெகா ஹெர்ட்சும் உயர் பிரிவில் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளும் ஏலம் விடப்படும். தற்போதைய 4ஜி சேவையைவிட சுமார் 10 மடங்கு அதிகமான வேகம் மற்றும் திறன்களை வழங்கும் 5ஜி தொழில்நுட்ப அடிப்படையிலான சேவைகளை வெளியிடுவதற்கு மத்திய மற்றும் உயர் அலைக்கற்றைகள் சேவை வழங்குநர்களால் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொலைத்தொடர்பு துறை அதிகாரிகளுடன் இதற்கான அலைக்கற்றை ஏல செயல்முறையை ஆய்வு செய்த மத்திய தொலைத்தொடர்புத்துறை இணையமைச்சர் தேவுசின் சௌஹான், ‘பிரதமர் நரேந்திர மோடியின் வலுவான தலைமையின் கீழ் இதுவரை ஒவ்வொரு மைல்கல்லையும் நாம் எட்டியுள்ளோம். வரும் ஆகஸ்ட் மாதம் பாரதத்தில் 5ஜி தொலைத்தொடர்பு சேவை அறிமுகப்படுத்தப்படும்’ என தெரிவித்தார்.