ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் அதானி குழுமத் தலைவருமான கெளதம் அதானிக்கு இன்று 60வது பிறந்த நாள். அதனை முன்னிட்டு கெளதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து பல்வேறு சமூகப் பணிகளுக்காக 60 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த கார்பஸ் தொகையினை அதானி அறக்கட்டளை நிர்வகிக்கும் என்று அதானி குழுமம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கௌதம் அதானி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “எங்கள் தந்தையின் 100வது பிறந்த நாள், எனது 60வது பிறந்த நாளில், அதானி குடும்பம் பாரதம் முழுவதும் சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்காக 60,000 கோடி ரூபாயை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என பதிவிட்டுள்ளார். சமூக சேவைக்காக இதுபோன்று மிகப்பெரிய தொகையை அறிவித்த முகநூல் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், மாபெரும் முதலீட்டாளரான வாரன் பஃபெட் உள்ளிட்ட பில்லியனர்கள் வரிசையில் தற்போது கெளதம் அதானியும் இணைந்துள்ளார்.