பாரத குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து வரும் ஜூலை 18ம் தேதி நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9ம் தேதி அறிவித்தது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக 64 வயதான திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார்.
திரௌபதி முர்மு யார்? ஒடிசாவின் மாயுர்பஞ்ச் மாவட்டத்தில் கடந்த 1958 ஜூன் 20 அன்று பிறந்த திரௌபதி முர்மு, புவனேஷ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் பட்டம் படித்த மர்மு, ஆசிரியராக பணிபுரிந்தவர். சந்தால் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரான இவர், 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் மற்றும் சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 1997ல் ராய்நகர்பூர் நகர் பஞ்சாயத்தில் இருந்து கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு சாதாரண கவுன்சிலராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய திரௌபதி முர்மு 2 முறை ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். பா.ஜ.கவை சேர்ந்த இவர் கடந்த 2000வது ஆண்டில் ஒடிசாவில் பா.ஜ.க, பிஜு ஜனதா தளம் கட்சி கூட்டணி ஆட்சி நடந்தபோது அமைச்சராக பதவியேற்றார். ஒடிசா மாநில வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், மீன்வளம் மற்றும் விலங்குகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
இவருக்கு கிடைக்கவுள்ள பெருமைகள்: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரான திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டால், பாரதத்தின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெறுவதுடன் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெறுவார். மேலும், இதற்கு முன் குடியரசுத் தலைவராக இருந்தவர்கள் அனைவரும் 1947க்கு முன் பிறந்தவர்கள் என்பதால், முர்மு வெற்றி பெரும் பட்சத்தில் சுதந்திர பாரதத்தில் பிறந்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு கிடைக்கும்.
ஆளுநராக மர்மு: 2015 முதல் 2021 வரை ஜார்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம், ஒடிசாவிலிருந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் மற்றும் முதல் பழங்குடியின ஆளுநர் என்ற அவர் பெருமையை பெற்றார். இந்த சூழலில்தான் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார். முன்னதாக, திரௌபதி முர்முவின் பெயர், கடந்த 2017ம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலின்போதே தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பரிசீலிக்கப்பட்டது. எனினும் அப்போது அந்த வாய்ப்பு பீகாரை சேர்ந்த ராம்நாத் கோவிந்துக்கு கிடைத்தது.
தலைவர்கள் வாழ்த்து: திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில், “திரௌபதி முர்மு, தனது வாழ்க்கையை சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கும், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும் அர்ப்பணித்துள்ளார். அவர் திறமையான நிர்வாக அனுபவத்துடன் ஒரு சிறந்த ஆளுநராக பதவி வகித்தவர். அவர் நம் நாட்டின் சிறந்த குடியரசுத் தலைவராக இருப்பார் என்று நம்புகிறேன்” என்று வாழ்த்தியுள்ளார். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட பல தலைவர்களும் திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆச்சரியம்: இந்த அறிவிப்புக்கு பின் திரௌபதி முர்மு அளித்த பேட்டியில், “எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, என்னால் நம்ப முடியவில்லை. இந்த கட்டத்தில் நான் அதிகம் பேச விரும்பவில்லை நன்றியுள்ளவளாக இருக்க கடமைப்பட்டுள்ளேன். அரசியலமைப்பில் குடியரசுத் தலைவருக்கு என்ன அதிகாரங்கள் உள்ளதோ அதற்கேற்ப நான் செயல்படுவேன். தேர்தலில் வெற்றிபெற அனைத்துக் கட்சிகள், மாநிலங்கள் ஆதரவைக் கோருகிறேன். எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெறுவேன்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்திலுள்ள கோயில் ஒன்றில் தரிசனம் செய்ய சென்ற அவர், கோயிலின் வளாகத்தை துடைப்பம் கொண்டு தானே சுத்தம் செய்தார். பின்னர் உள்ளே சென்று வழிபட்டார். இவருக்குள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில்கொண்டு தற்போது இஸட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.