ஸ்வப்னா சுரேஷ், மோடிக்கு கடிதம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக பெயரைப் பயன்படுத்தி அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தப்படுவதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தூதரக முகவரிக்கு அனுப்பப்பட்ட ரூ.13.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ கடத்தல் தங்கம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த 2020ல் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த புகாரில் கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள அரசியலில் புயலைக் கிளப்பிய இந்த தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ், தகவல் தொடர்புத் துறைச் செயலராகவும், கேரளா முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலராகவும் இருந்த சிவசங்கருடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் சிவசங்கர். என்.ஐ.ஏ, அமலாக்கத் துறை மற்றும் சுங்கத்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தங்கக் கடத்தலில் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நேரடி தொடர்பு இருப்பதாகக் கூறினார் ஸ்வப்னா சுரேஷ். இதையடுத்து பினராயி விஜயன் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகக் கோரி அம்மாநில எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. ஸ்வப்னா சுரேஷ் இதுகுறித்து தற்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ‘தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்காக அதனை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். சிவசங்கர்தான் தங்க கடத்தலில் ஈடுபட்டார். மூத்த அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு அடிபணிந்து நான் செயல்பட்டேன். நான் வேறு எந்த தவறும் செய்யவில்லை. கேரள முதல்வருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வழக்கில் நேரடி தொடர்பு உள்ளது. அவர்கள் இதுவரை விசாரிக்கப்படவில்லை. உங்களை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டுகிறேன்’ என கேட்டுக்கொண்டுள்ளார்.