கன்னியாஸ்திரிக்கு அச்சுறுத்தல்

கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரியான எல்சினா என்ற கே.எஸ்.சுதா, கர்நாடகாவில் உள்ள லேடி ஆஃப் மெர்சி மிஷன் சபையில் பணிபுரியும் சக கன்னியாஸ்திரிகள் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும், கான்வென்ட்டில் உள்ள இரண்டு ஆண்கள் தன்னை துஷ்பிரயோகம் செய்ய அனுமதித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, கர்நாடகாவின் குடகுப் பகுதியில் உள்ள லேடி ஆஃப் மெர்சி மிஷனால் நடத்தப்படும் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகளுக்கான பள்ளியின் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்ட அவர், அங்கு ஊனமுற்ற குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதை அறிந்து வேதனையுற்றார். அதனை  மேலதிகாரிகளிடம் கூறியபோது அவர் ​​மிரட்டப்பட்டு மைசூருவில் உள்ள மாகாண கான்வென்ட்டுக்கு மாற்றப்பட்டார். எல்சினா சர்ச்சுகளால் நடத்தப்படும் நிறுவனங்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் ஊழல்களையும் அம்பலப்படுத்த முயன்றார். இதனையடுத்து அங்குள்ள மற்ற கன்னியாஸ்திரிகள் மற்றும் சில ஆண்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். போதை ஊசி அவருக்கு போடப்பட்டது. பின்னர் மனநல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் மீது பாலியல் அத்துமீறலும் நடத்தப்பட்டது என குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து தனது உறவினருக்கு அவர் அனுப்பிய வீடியோ செய்தி ஒன்றில் தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறியுள்ளார். எல்சினாவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததால் அவரது உறவினர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்தே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. மருத்துவமனையை நடத்தும் கன்னியாஸ்திரிகள் எல்சினாவை பார்க்கக்கூட அவரது தந்தையையும் உறவினர்களையும் அனுமதிக்கவில்லை, எல்சினா தன் சொந்த விருப்பத்தின் பேரிலேயே மருத்துவமனையில் சேர்ந்ததாக சுய அறிவிப்பைக் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், தனது தந்தையுடன் காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். ஆனால், காவல்துறையினர் சர்ச்சுடன் ஒத்துழைத்து சமரசம் செய்ய முயற்சிப்பதாகவும் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை என்றும் எல்சினா குற்றம் சாட்டினார். இந்த செய்தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியானதையடுத்து, எல்சினாவின் புகாரின் அடிப்படையில், பிந்து, ஆன் மேரி, தீபா ஆகிய கன்னியாஸ்திரிகள் மற்றும் கான்வென்ட்டின் ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், எல்சினா மனநிலை சரியில்லாதவர், சபையின் நன்மதிப்பைக் கெடுக்கவும்,  அச்சுறுத்தவும் அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக லேடி ஆஃப் மெர்சி சபை குற்றம் சாட்டியுள்ளது.