நாட்டில் ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை திட்டத்தை செயல்படுத்தும் 36வது மாநிலமாக அசாம் உருவெடுத்துள்ளது. இதன்மூலம் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதுடன், உணவு பாதுகாப்பை நாடு முழுவதும் மாற்றிக்கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்ட கடந்த 2 ஆண்டு காலக்கட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் மலிவு விலை உணவு தானியங்களை பயனாளிகளுக்கு, குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்குவதை உறுதி செய்வதில், ‘ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை’ திட்டம் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. 80 கோடி பயனாளிகளுக்கும் பயனளிக்கும் இத்திட்டம், அறிமுகப்படுத்தப்பட்ட ஆகஸ்ட் 2019ல் இருந்து மிகக் குறுகிய காலத்திற்குள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தத் தொடங்கியதிலிருந்து 71 கோடி புலம்பெயர்ந்த பரிவர்த்தனைகள் மூலம் இதுவரை ரூ. 36,000 கோடி மதிப்புள்ள உணவு தானியங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.