தவறாக வழிநடத்த வேண்டாம்

அக்னிபத் திட்டத்தில் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதைத் தவிர்க்குமாறு அரசியல் கட்சிகளுக்கும் அவற்றின் தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ள மூத்த ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி இந்திரேஷ் குமார், நாட்டின் அமைதியான மற்றும் இணக்கமான சூழலை அழிக்கும் தங்கள் நடைமுறையை அவர்கள் கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், “நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் இளைஞர்கள் இந்த திட்டத்தை வரவேற்க வேண்டும். சிறந்த எதிர்காலத்திற்காக அவர்கள் இதில் பங்கேற்க வேண்டும். நம்மை நாமே மேம்படுத்துவதுடன் நமது நாட்டை அமைதி, முன்னேற்றம், நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றின் பாதையில் உலகை வழிநடத்தும் திறன் கொண்டதாக மாற்றுவோம். ‘ஒரே பாரதம் அகண்ட பாரதம்’ என்ற செயல்பாட்டில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம். தீ வைப்பு, கல் எறிதல், தூண்டுதல் மற்றும் வன்முறை போன்றவற்றை கைவிட வேண்டும். இந்தத் திட்டத்தை சரியான கண்ணோட்டத்தில் புரிந்துகொண்டு, அதற்கு நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் நமக்கும் நமது குடும்பத்திற்கும் நாட்டிற்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும். நாட்டின் நிலைப்பாட்டை விட வாக்கு வங்கியில் மட்டுமே எதிர்க்கட்சிகள் அக்கறை காட்டுகின்றன. இதனால், நாட்டை சீர்குலைக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் சூழலை கெடுக்கின்றன. அவர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இளைஞர்களை தவறாக வழிநடத்தும் நடைமுறையை கைவிட்டு, அக்னிபத் திட்டத்தையும் அதன் பலன்களையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவத்தைப் பேணுவதற்கான தெளிவான செய்தியை வெளிப்படுத்த வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.