யோகாவை சீர்குலைத்த மதவெறியர்கள்

மாலத்தீவில் எட்டாவது சர்வதேச யோகா தினத்தன்று கலோலு மைதானத்தில்  ஆயிரக்கணக்கானோர் யோகா பயிற்சி செய்து கொண்டிருந்தனர். மாலத்தீவில் உள்ள பாரதத் தூதரகம் இளைஞர், விளையாட்டு மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் தூதரக அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் மாலத்தீவு அமைச்சர்களும் கலந்துகொண்டனர். இந்த யோகா நிகழ்வின்போது கலோலு மைதானத்தில் நுழைந்த சில முஸ்லிம் அடிப்படைவாதிகள், மைதானத்தில் இருந்த கொடிகளை கிழித்தனர். யோகா  கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்களை தாக்கி விரட்டினர். இச்சம்பவம் அங்குள்ளோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் சர்வதேச அளவில் மாலத்தீவுக்கு அவப்பெயர் பெற்றுத் தந்தது. இதுகுறித்து மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலோலு மைதானத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து மாலத்தீவு காவல்துறையால் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விஷயமாக கருதப்பட்டு, இதற்கு காரணமானவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” என்றார். இந்த நிகழ்வுக்கு பின்னணியில் ‘இந்தியா அவுட்’ என்று நடத்தப்பட்டு வரும் பிரச்சாரம் உள்ளதாக கருதப்படுகிறது. முன்னாள் துணை அதிபர் அகமது அதீப்பின் கட்சியினர் “இந்தியா அவுட்” பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் மாலத்தீவுகளில் போராட்டங்களை ஏற்பாடு செய்து, வெறுப்பு பேச்சு மற்றும் இனவெறி கருத்துக்கள் மூலம் பாரதத்தினருக்கு எதிராக வெறுப்பை உருவாக்கி வருகின்றனர். அவர்கள் மாலத்தீவில் உள்ள பாரதத் தூதரகத்தின் வெளியே பலமுறை ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். மாலத்தீவில் பணிபுரியும் பாரத நாட்டினரும் இவர்களால் அவ்வப்போது துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.