மேற்குவங்க சட்டசபையில் அம்மாநில முதல்வரும் திருணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மமதா பானர்ஜி உரையாற்றுகையில், ‘அக்னிபத் திட்டம் மூலம் தங்களுக்கென ஆயுதக்குழுவை உருவாக்க பா.ஜ.க முயற்சிக்கிறது. அக்னிபத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் வீரர்கள் 4 ஆண்டுகளுக்கு பின் என்ன செய்வார்கள்? இளைஞர்களின் கைகளில் ஆயுதங்களை கொடுக்க பா.ஜ.க நினைக்கிறது’ என ‘அக்னிபத்’ திட்டம் குறித்த அடிப்படை புரிதல்கூட இல்லாமல் கருத்துத் தெரிவித்துள்ளார். இதேபோல, மேற்கு வங்க சட்டசபையில் நூபுர் சர்மாவை கண்டித்து திருணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நூபுர் சர்மாவின் பெயர் தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை. அப்போது பேசிய மமதா பானர்ஜி, ‘சில தலைவர்கள் பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மதங்களுக்கிடையே வெறுப்பை பரப்பும் சதியில் இது ஓர் அங்கம்’ என தெரிவித்தார். நுபுர் சர்மாவை பா.ஜ.க கட்சியை விட்டு வெளியேற்றியது, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்திருந்தும், தனது சொந்த காழ்ப்புணர்ச்சியால், தான் ஒரு முதல்வர் என்றும் பேசுவது சட்டசபை என்றுகூட உணராமல் மமதா பேசியுள்ளார் என சமூக ஊடகங்களில் மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தைக் கண்டித்து மேற்கு வங்க பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.