இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை (ஐ.ஐ.டி மெட்ராஸ்) உடன் இணைந்து மத்தியப் பிரதேசத்தின் மோவில் உள்ள இந்திய ராணுவத்தின் தொலைத்தொடர்பு பொறியியல் கல்லூரி (எம்.சி.டி.இ), இந்திய 5ஜி சோதனை அமைப்பை அமைக்கவுள்ளது. இந்த சோதனை அமைப்பானது இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்கு, குறிப்பாக எல்லைப் பகுதிகளில் 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உதவும். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ராணுவ அமைப்புகள், சாதனங்கள், உபகரணங்களைத் தூண்டுவதற்கும் இயக்குவதற்கும் உதவும். ஆயுதப் படைகளின் திறன்களை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான வழிமுறைகளைப் பயன்படுத்துவதற்கும் உத்வேகம் அளிக்கும். ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான யோசனைகளை பரிமாறிக்கொள்ளவும் உதவும். சுயசார்பு பாரதம் எனும் இலக்கை அடைவதற்கான இந்திய ராணுவத்தின் உள்நாட்டுமயமாக்கல் முயற்சிகளை விரைவுபடுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.