கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நிபுன் திட்டம்

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி, கட்டுமானத் தொழிலாளர்களின் திறன் பயிற்சிக்கான ‘நிபுன்’ (நிர்மான் மேம்பாட்டுக்கான தேசிய முன்முயற்சி) தொழிலாளர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக ஒரு புதுமையான திட்டத்தைத் தொடங்கி வைத்தார். நிபுன் திட்டமானது, தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் முதன்மைத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இந்த முன்முயற்சி கட்டுமானத் தொழிலாளர்களை மேலும் திறமையானவர்களாக மாற்றுவதுடன் கட்டுமானத் துறையில் எதிர்காலப் போக்குகளுக்கு ஏற்ப அவர்களின் திறன்களை அதிகரித்து பல்வகைப்படுத்தும். நகர்ப்புற தொழிலாளர்களுக்கு சுய வேலைவாய்ப்பு, திறமையான கூலி வேலை வாய்ப்புகளை வழங்குவதுடன் அவர்களை தொழில்முனைவோராக மாற ஊக்குவிக்கும். மத்திய அரசின் இந்த சான்றிதழ்களைக் கொண்டு  அவர்கள் மிக எளிதாக வெளி நாடுகளிலும் வேலை பெறமுடியும். இத்திட்டத்தின் மூலம், சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தொழில்துறை சங்கம் மூலம் நேரடியாக தொழில் திறன் பயிற்சி வழங்கப்படும். சுமார் 14,000 பேர் பிளம்பிங் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் திறன் கவுன்சில் மூலம் பயிற்சிகளை பெறுவார்கள்.