கிறிஸ்தவர்கள் ஏற்கும் ஆர்.எஸ்.எஸ்

புனேயில் டாக்டர் ஸ்ரீபதி சாஸ்திரி இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் ரிசர்ச்சின் ஆராய்ச்சி இதழின் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், புனே மறைமாவட்ட ஆயர் பிஷப் டாப்ரே கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘நல்ல எதிர்காலத்திற்காக கிறிஸ்தவ அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும். ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தம் மற்றும் கொள்கைகள் கிறிஸ்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை’ என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சில கிறிஸ்தவ குழுக்களிடமிருந்து அவருக்கு எதிராக கிண்டல்களும் கண்டனங்களும் எழுந்தன. உள்ளூர் செய்தித்தாள்கள் தனது கருத்துக்களை தவறாக முன்வைத்ததாகக் கூறி பிஷப்பை பின்வாங்கும்படி அவை கட்டாயப்படுத்தின. எனினும், அவற்றை தாமஸ் டாப்ரே, மிகப்பெரிய ஹிந்து அமைப்புடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

‘இந்த எதிர்வினைகள் பெரும்பாலும் நான் என்ன சொன்னேன் என்பதை சரியாக புரிந்துகொள்ளாத்தால் இருக்கலாம். ஆர்.எஸ்.எஸ் தேசியத்தை நம்புகிறது, கிறிஸ்தவ தேவாலயமும் தேசியவாதத்தை நம்புகிறது. நான் ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் அல்லது அதன் பாதுகாவலர் அல்ல. நான் ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமுதாயத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. எனினும், உண்மையில் நான், இந்திய ஆயர்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தவே நான் கோரினேன். நல்ல எதிர்காலத்திற்காக இருவருக்கும் இடையே அர்த்தமுள்ள உரையாடலாக அது இருக்க வேண்டும்.

நான் எப்போதும் இதனை கூறி வந்துள்ளேன். நான் தனிப்பட்ட முறையில் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் நல்லுறவைப் பேணி வருகிறேன். அவர்களுடன் நட்புறவைப் பேணியுள்ளேன். அவர்கள் எனது செய்தியை வெளியிட்டது எனக்குக் கிடைத்த கௌரவம். புனே முக்கிய மையமாக இருப்பதால் கத்தோலிக்க திருச்சபைக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் இடையே இடைநிலையாளராகச் செயல்பட விரும்புகிறேன்.

இரு தரப்பிலும் உள்ள தவறான புரிதல்களையும், தப்பெண்ணங்களையும் போக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் திருச்சபைக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தேவை. சர்ச்சைகளை உருவாக்குபவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் எப்போதாவது பேசியிருக்கிறார்களா? அல்லது அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸைத் தெரியுமா?

ஏசுவே ஒரு தேசபக்தர், யூத மக்களை நேசித்தார், யூத கலாச்சாரத்தை நேசித்தார். அவரைப் பின்பற்றுபவர்களும் அவரை போலவே தேசபக்தர்களாக இருக்க வேண்டும் என்று நான் குறிப்பிட்டேன் . பைபிளில், கடவுள் ஒவ்வொரு தேசத்திற்கும் நிலத்தை நிலையான எல்லைகளுடன் அனைத்து மக்களுக்கும் நிலத்தைப் பகிர்ந்தளித்தார் என்று கூறப்பட்டுள்ளது. இதனால்தான் கிறிஸ்தவர்களாகிய நாமும் நம் நாட்டை நேசிக்கிறோம், தேசபக்தர்களாக இருக்கிறோம். இவைதான் ஆர்.எஸ்.எஸ் கொள்கையும் கூட. தேசத்தின் மீதான அன்பு, மக்கள் மீதான அன்பு, கலாச்சாரத்தின் மீதான அன்பு என்றச் சூழலில், ஆர்.எஸ்எ.ஸ் அமைப்பின் கொள்கைகள் மற்றும் விழுமியங்கள் கிறிஸ்தவர்களாகிய எங்களால் ஏற்கத்தக்கவை என்று நான் கூறினேன்’ என்று தெரிவித்துள்ளார்.