ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை?

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துாரில், மார்ச் மாத்த்தில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில், அன்றைய போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றார். அவரை வரவேற்க சென்ற முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை, அமைச்சர் ராஜகண்ணப்பன், ஜாதியை சொல்லியும் ஒருமையில் பேசியும் திட்டினார். உன்னை மாவட்டம் விட்டு மாற்றிவிடுவேன் எனவும் மிரட்டினார். ‘அமைச்சர் திட்டியதால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன்’ என, ராஜேந்திரன் பேட்டியளித்தார். இந்நிகழ்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தி.மு.க கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதே காலகட்டத்தில் சென்னை எழிலகத்தில், போக்குவரத்து கமிஷனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி கட்டு கட்டாக பணத்தை கைப்பற்றினர். இதையடுத்து, ராஜகண்ணப்பனிடம் இருந்து போக்குவரத்து துறை பறிக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். இந்நிலையில், புரட்சி தமிழகம் என்ற கட்சியை நடத்தி வரும், ஏர்போர்ட் மூர்த்தி என்பவர் தேசிய எஸ்.சி எஸ்.டி கமிஷனில்  இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதில், ‘அரசியல் அமைப்பு சட்டத்தை மீறிய ராஜகண்ணப்பனை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என கோரியுள்ளார். இந்த புகாரை விசாரணைக்கு ஏற்ற, தேசிய எஸ்.சி எஸ்.டி ஆணையம், இதுகுறித்து ராமநாதபுரம் ஆட்சியர், மற்றும் எஸ்.பிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ராஜகண்ணப்பன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.