பத்திரமான தங்கப் பத்திரம்

முதலீடுகளில் மக்களின் முதல் விருப்பத் தேர்வான தங்கத்தை கட்டி, நாணயம், நகைகளாக வாங்கும்போது செய்கூலி, சேதாரம் என்ற பல்வேறு செலவினங்கள் உள்ளன. அதோடு அதன் பாதுகாப்பும் தரமும் பிரச்சனையாக உள்ளது. இதனால் தற்போது மக்கள் தங்கத்தை டிஜிட்டலில் வாங்கி வைக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். டிஜிட்டல் தங்கத்தில், தரம், பாதுகாப்பு, செய்கூலி, சேதார பிரச்சனைகள் இல்லை. மேலும் இதனை ரிசர்வ் வங்கி வெளியிடுவதால், இறையாண்மை தன்மை கொண்ட பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் பல்வேறு சவால்கள் இருந்து வரும் நிலையில், பாதுகாப்பான புகலிடமாக தங்கம் கருதப்படுகிறது. இதன் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என வல்லுனர்கள் கருதுகின்றனர். இந்த சூழலில் நடப்பு நிதியாண்டின் தங்கம் பத்திர முதலீட்டுத் திட்டத்தின் முதல் வெளியீடு ஜூன் 20 முதல் 24 வரை நடைபெறும். தங்கப் பத்திரங்களில் ஒரு தனி நபர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை முதலீடு செய்யலாம். அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ வரை வாங்கலாம். இந்த தங்க பத்திரங்களை வங்கிகள், அஞ்சல் அலுவலகம், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மூலம் வாங்கலாம். அல்லது வங்கிகளின் டிஜிட்டல் தளத்திலும் வாங்கமுடியும். ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு கிராமுக்கு 50 ரூபாய் சலுகையும் கிடைக்கும். இந்திய பங்கு சந்தைகளான என்.எஸ்.இ, பி.எஸ்.இயிலும் இது வர்த்தகம் செய்யப்படுகிறது. ஆனால் இதில் வாங்க டீமேட் கணக்கு தேவைப்படும். இந்த தங்க பத்திர திட்டத்திற்கு 8 ஆண்டுகள் முதிர்வுகாலம். ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உண்டு. தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5 சதவீத வட்டியும் கிடைக்கும். தங்க நகைகளை போன்றே இந்த தங்க பத்திரங்களையும் பிணையமாக வைத்து கடன் பெறமுடியும். முதிர்வடையும் வரை காத்திருந்தால் நீண்டகால மூலதன ஆதாய வரி விதிக்கப்படுவதில்லை.