இந்த ஆண்டின் சிறந்த நாடு பாரதம்

ஐரோப்பாவில் ‘விவாடெக் 2020’ என்ற மிகப்பெரிய ஸ்டார்ட்அப் மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் சிறந்த நாடாக பாரதம் அங்கீகரிக்கப்பட்டது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “இது ஒரு மிகப்பெரிய கௌரவம். இது உலகிற்கு பாரதத்தின் பங்களிப்பு முக்கியம் என்பதை உணர்த்துவதாகும். பாரத சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் இது. இந்த உற்சாகமான பயணத்தை நாங்கள் மேற்கொண்டு தொடர்வோம். உலகில் எங்கும் இல்லாத அளவிற்கு பாரதத்தில் மிகப்பெரிய அளவில் டிஜிட்டல் அடையாளங்கள் உள்ளது. பாரத இளைஞர்களின் ஆற்றல் போல உலகில் வேறு எங்கும் காண முடியாது. பாரதத்தில் பில்லியன் கணக்கான ஸ்மார்ட்போன்கள்; பில்லியன் கணக்கான வங்கி கணக்குகளையும் டிஜிட்டல் அடையாளங்களாக காணலாம். இது பாரதத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான தனித்துவமான பயன்பாட்டின் நிகழ்வுகளை சாத்தியப்படுத்தி உள்ளது. பாரதம் அளவுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லை. பாரதப்  பிரதமர் மோடியின் தலைமையில் மேலும் பல அற்புதமான திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளது. பாரதம் தற்போது முழுவதுமாக டிஜிட்டல்மயமாகி வருகிறது. அதற்கு யு.பி.ஐ மிக சிறந்த உதாரணம். யு.பி.ஐ’யை விட மிகப் பெரியதாக அடுத்து வரப்போகும் விஷயம் இருக்கலாம். பாரதம் ஆரோக்கியமான டிஜிட்டல் இலக்கை நோக்கி சென்று கொண்டுள்ளது. பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பாரதத்தில் தேசிய சுகாதார இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. பாரதத்தில் இருந்து சுமார் 65 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அரசின் ஆதரவோடு இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளன. பாரதத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன, புதுமைகளை உருவாக்கி வருகின்றன. இன்று அவை உலகளாவிய பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் செயல்படுகின்றன. கூகுள், மைக்ரோசாப்ட், அடோப் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர்களாக பாரதத்தினர் உள்ளனர். அவர்களிடம் ஒரு தனித்துவமான அமைப்பு உள்ளதை இது சுட்டிக் காட்டுகிறது. மிகப்பெரிய கல்விமுறை பாரதத்தில் உள்ளது, மேலும் பல புதுமையான டிஜிட்டல் தலைவர்கள் உருவாகி வருகிறார்கள். பல்வேறு எதிர்ப்புகளை கடந்து பாரதம் டிஜிட்டல் முறையில் சாதித்தது மிகப்பெரிய விஷயம். பாரதத்தை கெளரவித்த ‘விவாடெக் 2020’ மாநாட்டின் நிர்வாகிகளுக்கு நன்றி” என்று உரையாற்றினார்.