சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் இந்திய இளைஞர் காங்கிரஸின் (IYC) உள்கட்சித் தேர்தல் ஜூன் 12ம் தேதி நள்ளிரவில் முடிவடைந்த நிலையில் அதில் சுமார் 19 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இளைஞர் காங்கிரஸால் நடத்தப்பட்ட இந்த உட்கட்சி தேர்தலில் வாக்கெடுப்புக்கு ‘காங்கிரஸ் சந்தேஷ் ஆப்’ என்ற அலைபேசி செயலி பயன்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மகாராஷ்டிரா இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளர்கள் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களாக முதலில் பதிவு செய்ய வேண்டும். கூடுதலாக, விண்ணப்பதாரர்கள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க 8 வினாடி வீடியோவை சமர்ப்பிக்க வேண்டும். இந்த தேர்தலில் தங்களது வேட்பாளரை வெற்றிபெறவைக்க போலியாக வாக்களிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாய்கள், பூனைகள், மாடுகள் பெயர்களில் பல வாக்குகள் போடப்பட்டுள்ளன. பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களில் அவற்றின் படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் பலமுறை வாக்களித்துள்ளனர். மொத்தமுள்ள 19 லட்சம் வாக்காளர்களில் 17 லட்சம் புதிய வாக்காளர்கள். அவற்றில்தான் இந்த முறைகேடுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என அந்த கட்சியின் உறுப்பினர் ஒருவரது ஆதாரத்தை மேற்கோள்காட்டி ஜாக்ரன் பத்திரிகையின் செய்தி வெளியிட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் மற்றும் வேட்பாளர் வாக்களிக்கும் கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதன்மூலம் இளைஞர் காங்கிரஸ் கணக்கில் ரூ.11 கோடிக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பது தனிக்கதை.