தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள கீழ குத்தபாஞ்சான் கிராமத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்கள் சிலர், கிறிஸ்தவ மதத்திற்கு மாற மாணவர்களிடம் அழுத்தம் கொடுப்பதால், தங்கள் குழந்தைகளை அனுப்பப் போவதில்லை என்று பெற்றோர் கூறியுள்ளனர். இதுகுறித்து கடந்த ஆண்டே புகார் அளிக்கப்பட்டும் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை, இதனால் பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே பெற்றோர் போராட்டம் நடத்தினர். மாணவ, மாணவிகள் சுமார் 165 பேரை பள்ளிக்கு அனுப்ப அவர்களது பெற்றோர் மறுத்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கல்வித்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் வரை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். எங்கள் கிராமத்துக்கென அரசுப் பள்ளி வேண்டும் என பெற்றோர் கூறினர். மதமாற்ற குற்றச்சாட்டையடுத்து பள்ளிக் கல்வித்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. கீழ குத்தபாஞ்சான் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு பட்டியலினத்தவர் அதிகம் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.