5ஜி அலைக்கற்றை ஏலம்

பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 5ஜி தொழில்நுட்ப சேவையை வழங்குவதற்காக வெற்றி பெற்ற ஏலதாரர்களுக்கு அலைக்கற்றையை ஒதுக்குவதற்கான ஏலத்தை நடத்துவது குறித்த தொலைத்தொடர்புத் துறையின் முன்மொழிவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 20 ஆண்டுகாலம் வரை செல்லுபடியாகும் விதத்தில் மொத்தம் 72097.85 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை, 2022, ஜூலை இறுதியில் ஏலத்திற்கு விடப்படும். குறைந்த (600 மெகா ஹெர்ட்ஸ், 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ்), மிதமான (3300 மெகா ஹெர்ட்ஸ்) மற்றும் அதிக (26 ஜிகா ஹெர்ட்ஸ்)  அலைவரிசைகளுக்கு ஏலம் நடைபெறும். தற்போதைய 4ஜி சேவைகள் மூலம் சாத்தியமானதை விட சுமார் 10 மடங்கு அதிக வேகம் மற்றும் திறன்களை வழங்கும் 5ஜி தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்கு மிதமான மற்றும் அதிக அலைவரிசை அலைக்கற்றைகளை தொலைத்தொடர்பு வழங்குனர்கள் பயன்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொலைத்தொடர்பு துறை சீர்திருத்தங்களை தொடரும் வகையில், எளிதான வர்த்தகததை மேற்கொள்வதற்காக, வரவிருக்கும் அலைக்கற்றை ஏலத்தின் வாயிலாக வளர்ச்சிக்கான பல்வேறு சாத்தியங்களையும் அமைச்சரவை அறிவித்தது. முதன் முறையாக, வெற்றி பெறும் ஏலதாரர்கள் முன்பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. அலைக்கற்றை கட்டணங்களை ஒவ்வொரு வருடத்தின் துவக்கத்திலும் முன்கூட்டியே செலுத்தும் வகையில், 20 சம வருடாந்திர தவணைகளில் செலுத்தலாம். இதன் மூலம் பணப் புழக்கத் தேவைகள் கணிசமாக எளிதாக்கப்படும் என்றும், இந்தத் துறையில் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான செலவும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.