மதரசா ஆசிரியர் கைது

கேரள மாநிலம் காசர்கோட்டில் சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக முஸ்லீம் மதகுருவான சுபைர் தாரிமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் ஆதூர் ஜமாத் மசூதியுடன் இணைந்த மதரஸாவில் ஆசிரியராக உள்ளவர் சுபைர் தாரிமி. இவர் தெற்கு கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த 3 மாதங்களாக அவரால் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட 13 வயது சிறுவன் வீட்டில் அது குறித்து தெரிவித்ததையடுத்து விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிறுவனின் குடும்பத்தினர் இதுகுறித்து ஜமாத் கமிட்டியினரிடம் புகார் அளித்தனர். எனினும் ஜமாத் உறுப்பினர்கள் உறுதியளித்தபடி மதகுரு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், இதுகுறித்து வெளியே கூறக்கூடாது எனவும் சிறுவனின் குடும்பத்தை மிரட்டினர். சம்பவத்தை மூடிமறைக்க முயன்றனர். தாரிமிக்கு நல்ல சொற்பொழிவுத் திறன் இருப்பதாகவும், அதனால்தான் அவரை விட்டுக்கொடுக்க பள்ளிவாசல் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து சைல்ட் ஹெல்ப் லைனில் புகார் தெரிவிக்கப்பட்டதால் சம்பவத்தை விசாரித்த அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் தாரிமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், அங்கு பயிலும் ஒன்பதுக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு கஞ்சா போன்ற போதை பொருட்களை கொடுத்து அவர் இதுபோல நடந்துகொண்டுள்ளார் என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தை மூடி மறைத்த பள்ளிவாசல் அதிகாரிகள் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், அதிகாரிகள் அவர்களை பாதுகாக்க முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.