பிரதமர் மகாராஷ்டிரா பயணம்

மகாராஷ்டிர மாநிலத்துக்கு இன்று செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, புனேவின் டெஹுவில் உள்ள ஜகத்குரு சந்த் துகாராம் மகராஜ் ஆலயத்தை திறந்து வைக்கிறார்.  மும்பையின் ராஜ்பவனில் ஜல் பூஷன் கட்டிடத்தையும், புரட்சியாளர்களின் அரங்கையும் திறந்து வைக்க உள்ளார். மேலும், மும்பை சமாச்சார் நாளிதழின் த்விஷதாப்தி மகோத்சவம் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். குறிப்பு: அபங்கம் என்ற பக்தி கவிதைகள் மற்றும் கீர்த்தனைகள் மூலம் சமூகம் சார்ந்த வழிபாட்டை ஊக்குவித்தவர் துகாராம். அவரது மறைவிற்குப் பிறகு அங்கு ஓர் கற்கோயில் கட்டப்பட்டது, எனினும், ஓர் முறையான ஆலயமாக அது வடிவமைக்கப்படவில்லை. தற்போது அது 36 கோபுரங்களைக் கொண்ட கற்களால் செய்யப்பட்ட கோயிலாக புனரமைக்கப்பட்டுள்ளது. ஜல் பூஷன் என்பது 1885 முதல் மகாராஷ்டிரா ஆளுநரின் அதிகாரபூர்வமான இல்லமாகும்.2019ல் இது இடித்துவிட்டு புதிதாக கட்டப்பட்டது. 2016ல் மகாராஷ்டிரா மாநிலத்தின் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ், ராஜ்பவனில் பதுங்கு குழி ஒன்றைக் கண்டார். ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை ரகசியமாக பாதுகாப்பதற்காக ஆங்கிலேயர்கள் இதை முன்னர் பயன்படுத்தியிருந்தனர். இந்த பதுங்கு குழி, 2019ல் புதுப்பிக்கப்பட்டது. வாசுதேவ் பல்வந்த் பாட்கே, சபேகார் சகோதரர்கள், சாவர்க்கர் சகோதரர்கள், மேடம் பிகாஜி காமா, வி.பி. கோகாடே, 1946ல் நடைபெற்ற கடற்படை கிளர்ச்சியில் பங்கேற்றவர்கள் உள்ளிட்ட மகாராஷ்டிராவை சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் புரட்சியாளர்களின் பங்களிப்பை நினைவு கூரும் வகையில் புரட்சியாளர்களின் அரங்கு மற்றும் அருங்காட்சியகமாக பதுங்கு குழி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. ஃபர்துன்ஜீ மர்ஸ்பாஞ்ஜி என்பவரால் ஜூலை 1, 1822ல் மும்பை சமாச்சார், ஓர் வார இதழாக அச்சாகத் தொடங்கியது. பிறகு 1832ல் தினசரியாக அது மாறியது. கடந்த 200 ஆண்டுகளாக இந்த பத்திரிக்கை தொடர்ந்து வெளிவருகிறது. இதன் தனித்துவமான சாதனையைப் போற்றும் வகையில் இந்நிகழ்ச்சியின்போது அஞ்சல் தலையும் வெளியிடப்படுகிறது.