முஸ்லிம் மதகுருமார்கள் சங்கத் தலைவர் எம்.டி.யாஹியா தனது வீடியோ அறிக்கையில், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியிடம், நுபுர் சர்மாவின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வன்முறை மூலம் தீர்வு காண முயலும் பேரணிகளை அனுமதிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், முஸ்லிம் சமூகத்தினர் இதுபோன்றவர்களின் வலையில் விழ வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ‘முஸ்லிம் சமூகத்தின் ஒரு பிரிவினர் போராட்டம் என்ற பெயரில் வன்முறை, தீ வைப்பு, உடைமைகளுக்கு சேதம் ஏற்படுத்துவது, பொதுமக்கள், காவல்துறையினர் மீது கற்களை எரிவது தாக்குதல் நடத்துவது போன்றவை பொருளாதாரத்தை பாதிக்கிறது. பொது மக்களுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நிர்வாக ரீதியிலான நடவடிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். சொத்துக்களுக்கு தீ வைப்பது, காவல்துறையினரையும் பொதுமக்களையும் தாக்குவது காவல்துறையினரால் லத்தி சார்ஜ் செய்யப்படுவது ஆகியவை ஒரு பக்தியுள்ள மனிதனையும் அவனது பிம்பத்தையும் உயர்த்தாது” என்று கூறியுள்ளார். முன்னதாக நுபுர் சர்மா விவகாரத்தில், மாநிலம் முழுவதும் மசூதிகளுக்கு உள்ளே போராட்டங்களை நடத்த யாஹியா கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தார். அதேசமயம், சாலைகளைத் மறித்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது அரசு சுதந்திரமாக நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.