ஒட்டும் வெடிகுண்டு அச்சுறுத்தல்

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சமீபத்தில் டுரோன் மூலம் பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட 7 ஒட்டும் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து ஜூன் 30ம் தேதி தொடங்க உள்ள அமர்நாத் யாத்திரையின் போது ‘ஒட்டும் வெடிகுண்டுகள்’ பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து பாதுகாப்புப் படையினர் கவலை தெரிவித்துள்ளனர். ஹிராநகர் ரேஞ்சின் சி.ஆர்.பி.எப் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் தேவேந்தர் யாதவ், ‘ஒட்டும் வெடிகுண்டுகள்’ அச்சுறுத்தலைச் சமாளிக்க விழிப்புடன் இருப்பது அவசியம். யாத்திரை செல்லும் வழியில் நிறுத்தப்பட்டுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுக்கு இதுகுறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரச்சனையைச் சமாளிக்க விழிப்புணர்வைத் தவிர வேறு வழியில்லை. இதுகுறித்து பாதுகாப்புப் படைகள் எச்சரிக்கப்பட்டுள்ளன. அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. யாத்ரீகர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் தனிமைப்படுத்தப்பட்டு முழுமையாகச் சரிபார்க்கப்படும். யாத்திரையின் போது கண்காணிப்புக்கான ஆளில்லா விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது’ என்று கூறினார். ஒட்டும் குண்டுகள் அல்லது காந்த குண்டுகள் என அழைக்கப்படும் இவை அளவில் மிகச் சிறியவை மற்றும் பொதுவாக காந்த இயல்புடையவை. இந்த குண்டுகளை வாகனங்களில் பொருத்தி, டைமர் மற்றும் ரிமோட் ஹெல்ட் சாதனத்தைப் பயன்படுத்தி வெடிக்கச் செய்யலாம். இந்த ஒட்டும் குண்டுகளின் ஆரம்பகால பயன்பாடு 2ம் உலகப் போரின் போது ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட சில பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் அனுதாபிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவல்கள் அடிப்படையில் சில ஒட்டும் குண்டுகள் பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன என்றாலும், அவை ஏற்கனவே காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதக் குழுக்களுக்கு வினியோகிக்கப்பட்டிருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை.