துணைவேந்தர்கள் மாநாடு

மத்திய பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களின் இயக்குனர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாட்டை குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த ஜூன் 7ல் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் உயர் கல்விக்கான 161 மத்திய நிறுவனங்களில் 53 நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவும் மற்றவர்கள் இணையதளம் வழியாகவும் கலந்து கொண்டனர். சுதந்திரத்தின் 75வது ஆண்டு பெருவிழாவின் உயர்கல்வி நிறுவனங்களின் பங்களிப்பும் பொறுப்பும், உயர் கல்வி நிறுவனங்களின் சர்வதேச தரவரிசை, கல்வியாளர்களும் தொழில் துறையினரும், கல்வித்துறைகளின் ஒருங்கிணைப்பு போன்ர பல தலைப்புகள் இதில் விவாதிக்கப்பட்டன. முன்னதாக, தொடக்க அமர்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ‘நமது இலக்குகளை அடைவதற்கு உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியம். கடந்த ஆண்டு 29 பாரத கல்வி நிறுவனங்கள் கியூ.எஸ் தரவரிசை பெற்றிருந்தன. அது இந்த ஆண்டு 35 ஆக அதிகரித்திருத்துள்ளது’ என மகிழ்ச்சி தெரிவித்தார். உயிரி தொழில்நுட்பம், தொழில்நுட்ப மேம்பாடு போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் கல்வியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.