காசி விஸ்வநாதர் கோயில் தங்க முலாம்

காசி விஸ்வநாதர் கோயிலின் கோபுரத்திற்கு தங்கத்தகடு பொருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. கடந்த 2021 டிசம்பரில் காசி விஸ்வநாதர் கோயிலின் திறப்பு விழாவிற்கு சில மாதங்களுக்கு முன்பு பெயர் தெரியாத ஒரு நன்கொடையாளர் 60 கிலோ தங்கத்தை கோயிலுக்கு அளித்தார். அதனைகொண்டு கருவறையின் உள் சுவர்கள் மற்றும் கோபுரத்திற்கு தங்க முலாம் பூசுவதற்கு கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.

கோயிலுக்கு தங்க முலாம் பூசும் பணி மூன்று கட்டங்களாக துவங்கியது. சுவர்கள் முதலில் விஷேஷ பிளாஸ்டிக் அடுக்குடன் மூடப்பட்டன, பின்னர் செப்புத் தகடுகளால் மூடப்பட்டன, இறுதியாக தங்கத் தகடுகளைக் கொண்டு தங்கமுலாம் பூசப்பட்டது. முன்னதாக இவ்வாண்டு மார்ச் மாதம் காசி விஸ்வநாதர் கோயில் உட்சுவர்கள், கதவுகள் அனைத்தும் 37 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.

கோயில் கோபுரத்தை அலங்கரிக்க 23 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டது. குஜராத் மற்றும் டெல்லியில் இருந்து இதற்காக சிறப்புக் குழு வரவழைக்கப்பட்டது. 10 பேர் கொண்ட குழுவினர் இரண்டு ஷிப்டுகளாக வேலைசெய்து, ஜூன் 7ம் தேதி தங்க முலாம் பூசும் பணியை நிறைவு செய்தனர். ​​இப்பணி தற்போது நிறைவடைந்த நிலையில், கோயில் வளாகத்தின் கலைநயம்மிக்க சுவர்களை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. தீங்கு விளைவிக்கும் எனாமல் வண்ணப்பூச்சு அகற்றப்பட்ட பிறகு கலை சுவர்கள் மீட்டமைக்கப்படும். இந்த திட்டம் ஜூன் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

6 ஆண்டுகளுக்கு முன்பே இப்பணியை மேற்கொள்ள கோயில் அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். இதற்காக 42 கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கும் ஒப்புதலும் அளிக்கப்பட்டது. ஆனால், பனாரஸ் ஐ.ஐ.டி ஆய்வுக்குழுவின் அறிக்கையில், பழமையான கோயிலுக்கு அந்த எடையை தாங்கும் திறன் இல்லை என்று கூறப்பட்டதால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

900 கோடி மதிப்பிலான காசி விஸ்வநாதர் கோயில் வளாகத் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி காசி விஸ்வநாதர் கோயில் பகுதியை 2,700 சதுர அடியில் இருந்து 5 லட்சம் சதுர அடியாக விரிவுபடுத்தினார், ஜலசென், மணிகர்ணிகா மற்றும் லலிதா காட்கள் வழியாக காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் கங்கை நதிக்கும் இடையே நேரடி இணைப்பு ஏற்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

காசி விஸ்வநாதர் கோவிலில் தங்கத் தகடு அமைக்கும் பணி நடைபெறுவது இது இரண்டாவது முறையாகும். 18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பஞ்சாப் மகாராஜா ரஞ்சித் சிங், இரண்டு கோயில் கோபுரத்திற்கு தங்க முலாம் பூச ஒரு டன் தங்கத்தை நன்கொடையாக வழங்கியிருந்தார்.