கணக்கு தர தீட்சிதர்கள் மறுப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள், நகைகள், வருமானம், வரவு செலவு கணக்கு விவரங்களை, அறநிலையத் துறை அதிகாரிகள் குழு 7, 8ம் தேதிகளில் ஆய்வு செய்ய வரும்போது, சமர்ப்பிக்க வேண்டும் என, தமிழக ஹிந்து அறநிலைய துறை ‘நோட்டீஸ்’ வழங்கியது. இதற்கு, ‘நடராஜர் கோயில் நிர்வாகத்தில், பூஜைகளில் அரசு தலையிடக்கூடாது. கோயில் தீட்சிதர்கள் சிறுபான்மையினர்’ என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி, அறநிலையத்துறை ஆய்வுக்கு, தீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். முன்னதாக, இதுகுறித்து அறநிலையத்துறை ஆணையர், குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழக முதல்வர், ஆளுநர் உள்ளிட்டோருக்கு பொது தீட்சிதர்கள் கடிதம் அனுப்பியிருந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது. இந்நிலையில், திட்டமிட்டபடி வருவாய்த்துறை அலுவலர் சுகுமார் தலைமையிலான அறநிலையத்துறை அதிகாரிகள் சிதம்பரத்ம் நடராஜர் கோயிலுக்கு ஆய்வு செய்ய சென்றனர். கோயிலுக்கு சொந்தமான சொத்து, அதன் வருமானம், சொத்துகளின் தற்போதைய நிலை, சொத்து பதிவேகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கேட்டனர். இதற்கு பொது தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் கோயில் ஆவணங்களை அளிக்க மறுத்து விட்டனர். கோயிலில் ஆய்வு நடத்த சட்டரீதியாக அணுகவில்லை என தீட்சிதர்களின் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். நாங்கள் அரசுடன் இணக்கமான சூழ்நிலையை விரும்புகிறோம். அதே சமயத்தில் எங்களின் அரசியல் சாசன பாதுகாப்பு உரிமைகளையும் வலியுறுத்துகிறோம். கோயிலில் 2009ல் நடந்த கணக்கு தணிக்கைக்கே இன்னும் அறிக்கை தரவில்லை என தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர்.