தருமபுரி கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு

தருமபுரியில் வெளிபேட்டை தெருவில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 11 ஆயிரம் சதுரஅடி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிலங்கள் மீட்பு அமைப்பின் திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் ராதாகிருஷ்ணனுக்கு தகவல் ஒன்று கிடைத்தது. அங்கு சென்று இடங்களை பார்வையிட்ட அவர் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் கோயில் இடத்தில் இருந்து காலி செய்ய மறுத்து வருகின்றனர். கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கழிவுகள் அதிகப்படியாக கொட்டப்பட்டுள்ளது. அங்காளம்மன் கோயிலுக்கு சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 ஆயிரம் சதுர அடி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் கடைகளும் வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் கோயில் சொத்துக்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டும், அதனை அதிகாரிகள் செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். கோயில் நிலங்களை உடனடியாக மீட்க வேண்டும். அங்காளம்மன் கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.