மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தகவல் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர், 7ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை ஒரு கோடி மாணவர்களுக்கு திறன், மறுதிறன், மேம்பாடு ஆகியவற்றில் இன்டர்ன்ஷிப், அப்ரெண்டிஸ்ஷிப் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் வேலைவாய்ப்பு ஆகியவற்றை அளிக்கும் வகையில் டிஜிட்டல் ஸ்கில்லிங் திட்டத்தை துவக்கி வைத்தனர். கல்வி அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகம், ஸ்கில் இந்தியா திட்டங்கள், ஏ.ஐ.சி.டி.இ மற்றும் என்.எஸ்.டி.சி உள்ளிட்ட அமைப்புகள் ஒருங்கிணைந்து தேசிய அளவிலான இந்த முன்முயற்சியை எடுத்துள்ளன. 100க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப, கார்ப்பரேட் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் ஏற்கனவே இந்த தளத்தில் இலவசமாக தொழில்நுட்ப சான்றிதழ் பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளன. இந்தத் திட்டம், திறமையான பயிற்சி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் நிபுணத்துவத்தை வழங்கும். பல்வேறு தேவைகளுக்கு தகுந்த படிப்புகளுடன் சரியான விண்ணப்பதாரர்களை இணைக்கும். இதில் செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின், பெரிய தரவுக்ள், தரவு பகுப்பாய்வு, சைபர் பாதுகாப்பு, கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட பல பயிற்சிகள் வழங்கப்படும். இது பிரதமரின் ‘ஆத்ம நிர்பர் பாரத்’ தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றுவதற்கான ஒரு முன்முயற்சி என அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.