தி.மு.கவின் முதல் ஊழல் பட்டியல்

சென்னையில் பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “தமிழக அரசு சார்பில் கர்பிணி பெண்களுக்கு அம்மா நியூட்ரிஷியன் கிட் கொடுக்கப்பட்டு வருகிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா பெயர் நீக்கப்பட்டு நியூட்ரிஷன் கிட் என்று வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக 23.88 லட்சம் கிட்களை அரசு கொள்முதல் செய்கிறது. அதில் வழங்கப்படும் ஹெல்த் மிக்ஸ் அனிதா டெக்ஸ்காட் என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்து அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஆவின் ஹெல்த் மிக்ஸ் சேர்க்க செய்யப்பட்ட முடிவை தி.மு.க ஆடிட்டர் சண்முகசுந்தரம், அண்ணாநகர் எம்.எல்.ஏ மோகன் மகன் கார்த்தி உள்ளிட்டோர் அச்சுறுத்தி வாபஸ் பெற வைத்தனர். இதனால் அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதே அனிதா டெக்ஸ்காட் நிறுவனம்தான் தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பையும் வினியோகித்தது. அதை கருப்புப் பட்டியலில் வைப்பதாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் அதனை செய்யவில்லை. அந்நிறுவனத்துக்கே இந்த ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல இந்த கிட்டில் வழங்கப்படும் இரும்பு சத்து டானிக்கும் மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. உடனடியாக ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு ஆவினுக்கு ஒப்பந்தம் வழங்க வேண்டும். இதில் தலையிட தனிநபர் இருவரை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எப்படி அனுமதித்தார்? இதற்கு அமைச்சர் பதில் சொல்ல வேண்டும்.

ஜீ ஸ்கொயர் நிறுவனத்தின் வளர்ச்சி கழகமாக சி.எம்.டி.ஏ மாறியுள்ளது. இந்நிறுவனம் நிலம் அப்ரூவலுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் ஓரிரு மணி நேரம் மட்டுமே ஆன்லைன் லிங்க் செயல்பாட்டில் உள்ளது. பிறகு செயல்படாமல் முடக்கப்படுகிறது. இந்த கட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது. சாதாரண நபர்களும் நிறுவனங்களும் இவற்றுக்கான ஒப்புதல்களை பெற 200 நாட்கள் ஆகும்போது, இவர்களுக்கு மட்டும் அனைத்து ஒப்புதல்களும் 8 நாட்களில் தரப்பட்டுள்ளது. இப்படி இந்த நிறுவனம் 15 திட்டங்களை செய்து முடித்துள்ளது. இந்த சர்ச்சைகளில் ஜீ ஸ்கொயர் பெயர் அதிகம் அடிபடுவதால், அவர்கள் புதிதாக 6 நிறுவனங்களை துவக்கியுள்ளனர். இவை அனைத்திலும் கோபாலபுரம் குடும்பத்தினர், அண்ணாநகர் கார்த்தி போன்றோரே தலைவர்களாக உள்ளனர். பெரிய கட்டுமான திட்ட அனுமதிகள் ஜீ ஸ்கொயர் நிறுவனத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. லஞ்சம் அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது. இந்நிறுவனத்திற்கு ஆதரவாக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி செயல்படுகிறார். இதற்கு அமைச்சர் பதில் சொல்ல வேண்டும். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்வோம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம். 20ம் தேதிக்கு மேல் தமிழக ஆளுநரிடம் தி.மு.கவினரின் ஊழல்கள், தேசதுரோக பேச்சுகள், சட்ட மீறல் செயல்பாடுகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய 700 பக்க புத்தகத்தை அளிப்போம். தி.மு.க மீதான இந்த ஊழல் பட்டியல் முதலும் முடிவுமல்ல. இனியும் இப்படி வெளியாகும். குற்றச்சாட்டுகளுக்காக நோட்டீஸ் வந்தாலும் சந்திக்க தயார்

திமுகவிற்கு முன்னர் 2ஜி முடிவுரை எழுதியது போல , தற்போது ஜி ஸ்கொயர் என்ன செய்யப்போகிறது என காத்திருந்து பார்க்க வேண்டும். தமிழகத்தில் இருந்து தேர்வாகும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் குறைந்து வருகின்றனர். 42 பேர்தான் தேர்வாகியுள்ளனர் என்பதை ஏற்க முடியாது. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ரூ. 2 லட்சம்தமிழக அரசு வழங்க வேண்டும். அ.தி.மு.கவை அழித்துதான் பா.ஜ.க வளர வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. பல முக்கிய மசோதா நிறைவேற அ.தி.மு.க எங்களுக்கு துணையாக இருந்தது. அ.தி.மு.கவுடன் எங்களுக்கு சண்டை சச்சரவு கிடையாது. 20 சதவீத மக்கள் தேசிய அரசியலுக்கு ஆதரவாக உள்ளனர். சீமானுக்கு அவரது கட்சியை முதலிடம் கொண்டுவர ஆசை இருப்பதுபோல, பா.ஜ.கவை முதலிடம் கொண்டுவர எனக்கும் ஆசை இருக்கிறது. இலங்கை மக்களுக்கு நல்லது செய்ய மோடியால் மட்டும்தான் முடியும். சிறு குறு நிறுவனங்கள் அதிகமிருப்பது தமிழகத்தில்தான். எனவே லூலூ மால் இங்கு தேவையில்லை’ கூறினார்.’ என்று கூறினார்.