தன்மானச் சுரங்கம் – மஹாராணா பிரதாப் சிங்

கோணாத தீரத்தின் கோதிலாக் கோமகன்

காணாத சூட்சுமப் போர்முறைக் காவலன்

வீணான தேசத்தில் வீரத்தை மீட்டவன்

ராணா பிரதாப சிங்

ராணா சங்கா, சத்ரபதி சிவாஜி, குரு கோவிந்த் சிங் இவர்களுக்கு இடையே பாரதத்தின் முகலாய ஆக்கிரமிப்பை எதிர்த்தவர்கள் என்பதைத் தாண்டி, இன்னொரு முக்கிய ஒற்றுமை உண்டு. அது இவர்கள் பயன்படுத்திய ‘தர்’ அல்லது “தாட்” என்ற நூதனமான போர்முறை. பின்னாளில் “கொரில்லாப் போர்முறை” என்று அழைக்கப்பட்ட தாக்குதல் உத்திகளை இவர்கள் அனைவரும் பல்வேறு விதங்களில் பயன்படுத்தி, முகலாய ஏகாதிபத்தியத்தைக் கதிகலங்கச் செய்தனர்.

காடுகளிலும் மக்களிடையிலும் மறைந்து, திடீரென்று எதிரிகளைத் தாக்கி மீண்டும் மறைவதுதான் கொரில்லாப் போர்முறை. இதற்கு மக்கள் ஆதரவு மிகவும் அவசியம். அந்த ஆதரவு மேற்கண்ட பாரதத்தின் வீர புருஷர்களுக்கு அமோகமாக இருந்தது என்பது சரித்திரம். இந்தச் சரித்திரத்தின் ஆரம்பப் புள்ளி, ராணா பிரதாப் சிங்.

ராணா பிரதாப் சிங்கின் தந்தை இரண்டாம் உதய் சிங் காலத்தில், அவர்கள் சித்தூர் பகுதியை ஆண்டு வந்தனர். அங்கு முகலாயர்கள் ஆக்கிரமிப்பு நிகழ்ந்தபோது, கோகுண்டா பகுதிக்கு இடம்பெயர்ந்து, மேவார் ஆட்சியை அமைத்தார் உதய் சிங். முகலாயர்களுக்கு வரி செலுத்தக் கூடாது என்ற உறுதியின் காரணமாகக் கடுமையான துன்பங்களுக்கு ஆளானார். இந்தப் போராட்டத்தில் அவரது உடல்நிலை பெரிதும் பாதிப்படைந்தது. ஆட்சி அமைத்த சிறிது காலத்திலேயே உதய் சிங் மரணம் அடைந்தார்.

அப்போது இளவரசராக இருந்த பிரதாப் சிங் மன்னராகப் பதவி ஏற்கவில்லை. மாறாக, தனது சகோதரன் ஜக்மல் சிங்கிடம் ஆட்சிப் பொறுப்பை ஏற்குமாறு வேண்டினார். இதன் விளைவாக ஜக்மல் சிங் மேவார் அரசரானார்.

ஏறக்குறைய ஒட்டுமொத்த பாரதத்தையும் அப்போது அக்பர் தனது சாம்ராஜ்யத்திற்கு கீழ் கொண்டு வந்துவிட்டார். மேவார் பகுதி மட்டும் மிச்சம் இருந்தது. அந்தப் பகுதியைக் கைப்பற்றாமல் தன்னை “ஹிந்துஸ்தானத்தின் பாதுஷா” என்று கூறிக்கொள்ள இயலாது என்பதை அக்பர் உணர்ந்தார். இதற்காக ஜக்மல் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தத் துவங்கினார்.

மேவார் பகுதி அக்பர் கட்டுப்பாட்டில் வந்துவிடும் என்று வெகுண்ட மக்கள், ஜக்மல் சிங்கிற்கு எதிராகப் புரட்சி செய்யத் துவங்கினர். மக்களும் அமைச்சர்களும் பிரதாப் சிங் மன்னராக வேண்டும் என்று வற்புறுத்தினர். இதனால் கோபமடைந்த ஜக்மல் வெளிப்படையாகவே அக்பருடன் சேர்ந்து, தனது வம்சத்திற்கும் மக்களுக்கும் மகத்தான துரோகத்தைச் செய்தார்.

மேவார் சமஸ்தானம் அடிமையாகும் சூழலில், வேறு வழி இல்லாமல் அரியணை ஏறினார் ராணா பிரதாப் சிங். ஆட்சிக்கு வந்தபோதே தந்தையின் மரணம், சகோதரனின் துரோகம், முகலாயப் பேரரசு எனும் மிகப்பெரிய சக்தியின் பகைமை என்று பல சோதனைகள் அவரைச் சூழ்ந்தன. ராணா பதவி ஏற்றவுடன், ஹல்திகாட் போரில் மேவார் பகுதியை அக்பர் கைப்பற்றினார். இதற்கு ஜக்மல் சிங்கின் உதவி ஒரு முக்கியக் காரணம். போரில் படுகாயம் அடைந்த ராணா பிரதாப் சிங், தனது படையுடன் ஆரவல்லி மலைப்பகுதிகளில் மறைந்தார். இத்துடன் மேவார் பிரச்சினை தீர்ந்தது என்று நினைத்த அக்பர், தனது படைகளை பீகார், பஞ்சாப் பகுதிகளில் நடந்த கிளர்ச்சிகளை அடக்கப் பணித்தார்.

அப்போது பிரதாப் சிங்கிடம் இருந்தது இரண்டாயிரத்திற்கும் குறைவான வீரர்கள். முகலாய ராணுவம் லட்சக்கணக்கான வீரர்களைக் கொண்ட வல்லரசு. ஆனால், இந்தப் படையை வைத்துகொண்டு, தியாவர் எனும் முகலாயர் பிராந்தியத்தைத் தாக்கினார் ராணா. மேலும் மேவார் பகுதியில் முகலாயர்கள் அமைத்திருந்த 36 படைத் தளங்களையும் ஒரே நேரத்தில் தாக்கினார்.

நாட்டில் இருந்து தோற்கடிக்கப்பட்டு, விரட்டப்பட்ட ஒரு அரசன், நாட்டின் எல்லைகளைத் தாக்குவதுதான் சாத்தியம். ஆனால், நாட்டுக்கு உள்ளே இருக்கும் பகுதிகளை தாக்கிய இந்தப் போர்முறை, அதுவரை நிகழாத அதிசயம். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, மேவார் பிரதேசத்தை ராணா தனது கட்டுக்குள் கொண்டுவந்து பலப்படுத்தத் துவங்கினார்.

இந்த நிலையில் அக்பர் லாகூர் சென்றார். அங்கு பன்னிரண்டு ஆண்டுகள் அவர் இருக்க வேண்டிய சூழல் உருவானது. இந்தக் காலகட்டத்தில் பலமுறை மேவார் பகுதியைக் கைப்பற்ற பல முகலாய படைத் தளபதிகளும், அக்பருக்கு அடிபணிந்த ஹிந்து மன்னர்களும் முயன்றனர். ஒருவரால்கூட மேவார் சமஸ்தானத்தின் எல்லையில் காலூன்ற முடியவில்லை. மேவார் அக்பரின் வெற்றிச் சரித்திரத்தில் ஒர் அழிக்க முடியாத தோல்வியாக படியத் துவங்கியது.

இப்படி போர்களில் முகலாயர்களைப் புறம் கண்ட ராணா பிரதாப் சிங், அந்நிய ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தையும் தூண்டினார். மேவார் பகுதி மட்டுமின்றி, பாரதத்தின் பல பகுதிகளில் இதன் விளைவுகள் எதிரொலித்தன. சாதாரண மக்கள் முகலாயர்களுக்கு வரி கொடுக்க மறுத்தனர்.

முகலாய அதிகாரிகள் வரிவசூல் செய்ய வந்தால், ஒட்டுமொத்த கிராமமும் காணமல் போகும். இருக்கும் பொருட்கள், தானியங்களை எல்லாம் எடுத்துகொண்டு மக்கள் மலைகளில் மறைந்து கொள்வார்கள். நம்மை ஆண்ட ஓர் அந்நிய சக்திக்கு எதிரான முதல் சத்தியாகிரகம் இது என்று கூறலாம்.

அன்றைய மேவார் பிரதேசம், அதிகபட்சம் பத்தாயிரம் சதுர மைல்கள் உள்ள நிலப்பகுதி. ஆனால், “இந்த மேவார் சமஸ்தானத்திற்கு பதிலாக, முகலாய சாம்ராஜ்யத்தில் பாதியை கொடுப்பதற்கு அக்பர் தயாராக இருந்தார்” என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.

அப்படி இந்த மேவார் சமஸ்தானத்திலே தங்கச் சுரங்கம் ஏதாவது இருந்ததா? என்றால், அதெல்லாம் எதுவும் கிடையாது. ஆனால் ஒரு தன்மானச் சுரங்கம் இருந்தது. அதனை எப்படியாவது தனக்குக் கீழ்படியச் செய்துவிட வேண்டும் என்று எட்டுமுறை தூது அனுப்பினார் அக்பர். இறுதிவரை தோல்விதான்.

மேவார் ராணா பிரதாப் சிங்கிடம் இருந்து வரிவசூல் உரிமை முதல், பட்டத்து யானை வரை எல்லாவற்றையும் பிடுங்கி, அச்சுறுத்தினார் அக்பர். “சாப்பிட உணவு இல்லை என்றால், புல்லைத் தின்று வாழ்வேன்” என்றார் ராணா. ராணாவின் பட்டத்து யானை, அக்பர் கொடுத்த புல்லைக் கூடத் தின்னாமல், டெல்லியில் சாப்பிடாமலே உயிர் துறந்தது என்பதும் வரலாறு.

இத்தகைய வீரச்சுடர் எதிர்பாராத விதமாக 56 வயதில் அணைந்துபோனது. மரணப் படுக்கையில் “எந்தக் காரணம் கொண்டும் முகலாயர்களுக்கு அடிபணியக் கூடாது. எப்படியாவது மீண்டும் சித்தூரைக் கைப்பற்றி ஒரு பெரிய ஹிந்து ராஜ்யத்தை ஸ்தாபிக்க வேண்டும்” என்று தனது மகனிடம் வாக்குறுதி பெற்று, சுதந்திர வீரனாக வீர சொர்க்கம் எய்தினார் ராணா பிரதாப் சிங்.

அவரது இறுதி விருப்பம் நிறைவேறவில்லை. ராணா பிரதாப் சிங்கின் மகன் அமர் சிங் ஜகாங்கீர் காலத்தில் முகலாயர்களுக்கு அடிபணிந்தான். ஆனால், பாரதத்தில் அடுத்து வந்த சுதந்திர வீரர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக, உந்து சக்தியாக ராணா பிரதாப் சிங்கின் சரித்திரம் நிலைத்து நின்றது. சத்ரபதி சிவாஜி துவங்கி, ஆங்கிலேயர்களை எதிர்த்த வங்காளப் போராளிகள்வரை அனைவரும் ராணா பிரதாப் சிங்கின் வீரத்தைத் தொடர்ந்து உதிரம் ஊற்றி வளர்த்துப் போற்றினர்.

                                                                                                                                                                       – ராகவேந்திரன் SS