உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நேற்று அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோயிலின் கர்ப்பகிரகத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். வேதமந்திரங்கள் முழங்க இதற்கான முதல் கல்லை கோயில் தளத்தில் வைத்து முதல்வர் யோகியும் அவரது சீடர்களும் ‘சிலா பூஜை’ செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதித்யநாத், ‘பக்தர்களின் 500 ஆண்டுகால அசெளகரியம் முடிவுக்கு வரப்போகிறது. மக்களின் நம்பிக்கையின் அடையாளமாக இந்த கோயில் இருக்கும். ஸ்ரீராமர் கோயில் ஒரு தேசியத்திற்கான அடையாளமாக இருக்கும். மக்கள் நீண்ட காலமாக இந்த நாளுக்காக காத்திருக்கிறார்கள். ஸ்ரீராமர் கோயில் பாரதத்தின் ஒற்றுமையின் அடையாளமாக இருக்கும். இக்கோயிலின் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது’ என்று கூறினார். ஸ்ரீராமர் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா, ‘2022 பிப்ரவரியில் தொடங்கப்பட்ட கிரானைட் கற்களால் கட்டப்படும் பீடம் ஆகஸ்ட் 2022க்குள் நிறைவடையும். பீடத்தின் கட்டுமானத்தில் 5 அடிx2.5 அடிx3 அடி அளவுள்ள சுமார் 17,000 கற்கள் பயன்படுத்தப்படும். 2023க்குள் கர்பகிரக கட்டுமானம் முடிக்கப்படும். 2024ல் கோயில் கட்டுமானம் முடிவடையும். 2025க்குள் கோயில் வளாகத்தில் மற்ற முக்கிய கட்டுமானங்கள் நிறைவு பெறும். இதற்கான தரமான கிரானைட் கல், கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. அயோத்திக்கு கிரானைட் கற்களை விரைவாக கொண்டு செல்ல ரயில்வே அமைச்சகம், கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா முழு ஆதரவை வழங்கியுள்ளது. கோயிலின் மேற்கட்டமைப்பு செதுக்கும் பணிகள் ராஜஸ்தான் பன்சி பஹர்பூரில் நடைபெறுகிறது. இதுவரை, ஏறத்தாழ 75,000 கன அடி கல் செதுக்கப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள மேற்கட்டுமானத்திற்கு மட்டும் 4.45 லட்சம் கன அடி கற்கள் தேவைப்படுகின்றன’ என தெரிவித்தார்.